![Anti-corruption police raid RTO office Rs 35,000 in unaccounted money confiscated](http://image.nakkheeran.in/cdn/farfuture/laWLTMWJDJoyJlAF-3Xa3h1sN0A8y21Bzp4-BT6Ly3g/1602935125/sites/default/files/inline-images/money-in_1.jpg)
கடலூர் மாவட்டம், கேப்பர் மலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெறுவதாக கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து கடலூர் லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் மெல்வின்ராஜாசிங் தலைமையில் ஆய்வாளர்கள் சண்முகம், திருவேங்கடம், மாலா மற்றும் போலீசார் நேற்று மாலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு (RTO OFFICE) சென்றனர். அங்கு ஓட்டுனர் உரிமம், பதிவு சான்றிதழ் உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக காத்திருந்த பொதுமக்களை வெளியே அனுப்பிய போலீசார், இடைத்தரகர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோரை உள்ளே வைத்து, கதவை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலக ஊழியர்களின் மேஜை, டிராயர், பீரோக்களில் கணக்கில் காட்டப்படாத பணம் உள்ளதா என சோதனையிட்டனர். அதேபோல் அங்கிருந்த இடைத்தரகர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு இரவு 9.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை முடித்தனர். தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் புறப்பட்டு சென்றதும் போக்குவரத்து அலுவலக ஊழியர்களும் புறப்பட்டு சென்றனர். இந்த சோதனையின் முடிவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.32,000 ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த இந்த திடீர் சோதனை கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.