காவிரி டெல்டா பகுதி விவசாயிகளை வருடம் தவறாமல் வரும் புயலோ, வறட்சியோ, வெள்ளமோ ஏதாவது ஒரு இயற்கை சீற்றம் விவசாயத்தை அழித்து விவசாயிகளை கடனாளிகளாக்கிவருகிறது. இயற்கையோடு சேர்ந்து அதிகாரிகளும் விவசாயிகளை வாட்டிவதைக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் வேளாண்துறையே முக்கிய பங்காற்றிவருகிறது.
இந்த துறைக்கு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி அதனை விவசாயிகளுக்கு வழங்கிட உத்தரவிடுகிறது. அந்த வகையில் விதைநெல், உரம், பூச்சிகொல்லி மருந்து, பயறு, உளுந்து விதைகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் விவசாயிகளுக்கு முழு மானியத்திலும், அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் ஒருங்கிணைந்த கிராம உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவருகிறது.
அந்த வகையில் வலங்கைமான் வேளாண் விரிவாக்க மையத்தில் பணியாற்றிவரும் வேளாண் அதிகாரிகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் அரசால் ஒதுக்கப்பட்ட பயறு, உளுந்து விதைகளை விவசாயிகளுக்கு விற்றதுபோல் விவசாயிகளின் பெயரில் போலியான ஆவணங்களை தயார் செய்து மோசடி செய்துள்ளனர். மேலும், விவசாயிகளுக்கு மானியவிலையில் விற்கப்பட்டதாக கணக்குகாட்டப்பட்ட பயறு, உளுந்து விதைகளை வேளாண் அதிகாரிகள் தனியார் கடைகளில் மொத்தமாக விற்பனை செய்து பல லட்ச ரூபாய் ஊழல் செய்துள்ளனர்.
இதனை ஆதாரபூர்வமாக கண்டுபிடித்த விவசாயிகள், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். அவர்கள் கூறிய தகவலின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் 13 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், வலங்கைமான் வேளாண்மை விரிவாக்க மையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட வேளாண்துறை அலுவலர்களிடம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 23,42,150 பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றியதோடு சம்மந்தப்பட்ட வேளாண் அலுவலர்களிடம் தொடர் விசாரணையும் நடத்திவருகின்றனர்.