தமிழகத்தில் கடந்த 2011 - 2016 காலகட்டங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த காலகட்டத்தில் வீட்டு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் கோலோச்சிய வைத்திலிங்கத்தின் மீதும், அவரது மூத்த மகன் பிரபு மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
2011 -2016 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னுடைய மூத்த மகன் பிரபுவின் பெயரில் கணக்கிலடங்காத சொத்துக்களைச் சேர்த்துள்ளதாகவும், அதற்கு முன்பு வரை வைத்திலிங்கத்தின் மனைவி மற்றும் மூத்த மகன் பெயரில் ரூ.1,44, 91,000 சொத்து மட்டுமே கணக்கில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதிகாரத்தில் இருந்த இடைப்பட்ட காலத்தில் ரூ. 32, 47,10,000 அளவில் சொத்து சேர்த்துள்ளார். இதன்மூலம் 1057.85 சதவீதம் வருமானம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரபுவின் பெயரில் முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் ரூ.23 கோடியே 60லட்சம் மதிப்பில் திருவெறும்பூர் மற்றும் பூந்தமல்லியில் வீட்டு மனை வாங்கியதாகக் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. எனவே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மறைமுகமாக தன்னுடைய மகன் பெயரில் சொத்து மற்றும் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.