
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது உதவியாளர் சந்தோஷின் வீடு, எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசன் வீடு, கடை, அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில், அவர் மீது இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று நிறுவனங்கள் உட்பட மொத்தம் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.23 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அது குறித்து எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடத்திவருகின்றனர். அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரது குடும்பத்தினர் அடிக்கடி வெளிநாடு சென்றுவந்ததால், வெளிநாடுகளில் ஏதேனும் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளனவா என்ற கோணத்திலும் அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே, அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானோர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டருகே திரண்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.13 லட்சம் ரொக்கம் உட்பட சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.