சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் மற்றும் புகையிலை பொருட்கள் ஒழிப்பு, புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பள்ளியின் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராகச் சிதம்பர நகரக் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.
பேரணியில் பள்ளியின் சாரணர் மற்றும் சாரணியர்கள் பசுமை படை மாணவர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், சிதம்பரம் நகரத்தை போதையில்லா நகரமாக உருவாக்க உறுதிமொழி ஏற்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளான கீழவீதி, தேரடி பிள்ளையார் கோவில் தெரு, தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து பள்ளியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிதம்பரம் நகரக் காவல் உதவி ஆய்வாளர் பரணிதரன், பள்ளியின் துணை தாளாளர் ரூபியல் ராணி, மெட்ரிக் பள்ளியின் முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ்போனீகலா, உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டு போதைப் பொருட்களின் தீமைகள், மாணவர் பருவத்தில் எவ்வாறு போதைப் பொருட்களுக்கு அடிமையாகி மாணவர்களின் வாழ்க்கை வேறு திசைக்கு மாறுகிறது என்பது குறித்துப் பேசினார்கள். இதற்கான ஏற்பாடுகளைச் சாரண சாரணிய இயக்கத்தின் ஆசிரியர்கள் ஜெயந்தி, ரஞ்சித், பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர் மாணவி சவிதா அனைவருக்கும் நன்றி கூறினார்.