தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இரண்டு முறை வெளிநாட்டுப் பயணம் சென்ற முதல்வரால் தமிழகத்திற்கு என்னென்ன முதலீடுகள் வந்துள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் செய்தியாளர்கள் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''சில பேர் நிறையக் கனவுகளுடன்... நடக்கவே முடியாத கனவுகளோடு இருப்பார்கள். அதனால் அந்த காழ்ப்புணர்வில் சில விமர்சனங்களை வைப்பார்கள். நன்றாக தெரியும் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து தமிழ்நாட்டிற்கு பல முதலீடுகள் வந்து கொண்டிருக்கிறது.
இப்பொழுது வெளிநாடு சென்று அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனங்களை எல்லாம் சந்தித்து அவர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். எல்லா விதங்களிலும் தமிழ்நாடு முதலில் இருக்கக்கூடிய மாநிலமாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் இப்படி வரும் விமர்சனம் என்பது காழ்ப்புணர்வை தவிர வேறொன்றுமில்லை'' என்றார்.