தமிழக - கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக கேரள எல்லையில் உள்ள பாலக்காடு மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் எல்லையைக் கடக்கும் வாகனங்களிடம் லஞ்சம் வாங்குவதாகப் புகார் எழுந்தது. குறிப்பாக தற்போது சபரிமலை சீசன் என்பதால் சபரிமலைக்குச் செல்லும் வாகனங்களை நிறுத்தி வாகனத்தின் ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெறுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதேபோல் நட்புன்னி பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியிலும் இதேபோல் லஞ்சம் வாங்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் இன்று திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சோதனைச் சாவடி அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத 26 ஆயிரம் ரூபாய் இருந்ததை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனைக்குச் சென்ற நேரத்தில் அலுவலக உதவியாளராக இருந்த சந்தோஷ் டேனியல் என்பவர் ஓட்டம் பிடித்தார். அவரைத் துரத்திப் பிடித்து வந்த போலீசார் அலுவலகத்தில் சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத இந்த 26 ஆயிரம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.