கே.டி.ராஜேந்திரபாலாஜி.. அதிரடி கிளப்பும் அரசியல்வாதி என்ற முறையில் எப்படியோ? அமைச்சர் என்ற வகையில் எப்படியோ? மதம் சார்ந்த சர்ச்சை கருத்துகளைப் பேசுவதில் எப்படியோ? ஆனால்.. உரிய நேரத்தில் சக மனிதர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில், தனித்தன்மை மிக்கவராக இருக்கிறார். ‘உதவாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்’ என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார், கே.டி.ராஜேந்திரபாலாஜி.
பயணத்தின்போது அடித்தட்டு மக்களைச் சந்திப்பதையும், அவர்களின் தேவையறிந்து ஏதாவது தருவதையும் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். உதவி கேட்டு வருபவர் எந்தக் கட்சி என்றெல்லாம் பார்க்கவே மாட்டார். உதாரணத்துக்கு ஒரு சம்பவம். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அந்தத் தலைவர், கலைஞர் வரையிலும் நெருங்கிய நட்பு வைத்திருந்தவர். அரசியலை வைத்து சம்பாதிக்காதவர். எதற்காகவும் யாரிடமும் போய் நிற்காதவர். முதுமையின் காரணமாக உடல் நலிவுற்றிருந்த அவர், பொருளாதார வசதியின்மையால், உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி, உடனடியாக அவருக்கு உதவினார். அவரிடம் “அய்யா.. நீங்க அந்தக் காலத்துல மேடையில பேசுவீங்க. நான் தரையில உட்கார்ந்து கைதட்டி உங்க பேச்சை கேட்டிருக்கேன். கட்சி கிடக்கட்டும்யா கட்சி. உங்களை எப்பவும் நான் மதிக்கிறவன்.” என்று கூற, அந்தத் தலைவருக்கு கண் கலங்கிவிட்டது.
இதய அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ உதவிகளுக்காக நிதி கேட்டு தன்னைச் சந்திக்க வருபவர்களை, மதுரையிலுள்ள அந்த பிரபல மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது அவரது வழக்கம். சாலையோரம் கொய்யாப்பழம் விற்கும் மூதாட்டிகளிடம் 10 ரூபாய்க்கு பழம் வாங்கிவிட்டு, 1000 ரூபாய் கொடுத்து அவர் மகிழ்வதெல்லாம் சகஜம். உலக அளவில் மதிக்கப்படும் தன்னலமற்ற அந்த ஆன்மிகப் பெருமாட்டியை ஒருமுறை சந்தித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, “அம்மா.. உங்க பெயர்ல முதியோருக்கான ஆசிரமம் பல ஊர்ல இருக்கிறத நான் பார்த்திருக்கேன். ரொம்ப நல்ல காரியம் பண்ணுறீங்க. நானும் அந்தமாதிரி ஒரு ஆசிரமம் நடத்தணும்னு நினைக்கிறேன். நீங்கதான் வழிகாட்டணும்.” என்றிருக்கிறார். அந்த அம்மா “தமிழ்நாட்டுல மந்திரியா இருக்கிற ஒருத்தருக்கு, மக்களுக்கு சேவை செய்யணும்கிறதுல இவ்வளவு ஆர்வமா?” என்று வியந்திருக்கிறார்.
அமைச்சர்களாக இருப்பவர்கள், அரசியல் தலைவர்களாக இருப்பவர்கள், கல்லூரிகளைக் கட்டி, கல்வித் தந்தை ஆவதில்தான் பெரும் விருப்பமுடையவர்களாக இருப்பார்கள். பிற்காலத்தில் அரசியல் கைவிட்டாலும் கூட, கல்விக் கட்டணத்தின் மூலம் கிடைக்கும் பெரும் தொகை, தங்களது தலைமுறையினரைக் காப்பாற்றிவிடும் என்பது அவர்களின் திட்டமாக இருக்கும். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் கட்டுமானம் ஒன்றை எழுப்பி வருகிறார். அது கல்லூரி அல்ல, கோவில். தனது சொந்த முயற்சியில் அந்தக் கோவிலைக் கட்டி வருகிறார். இன்னும் எத்தனை காலத்துக்கு அரசியல் சரியாக வரும்? என்று தனக்குள்ளே கேள்வி எழுப்பி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான ஆன்மிகப் பணிக்கு, தன்னை அவர் தயார்ப்படுத்தி வருவதாகச் சொல்கிறார்கள், அவரது ஆதரவாளர்கள்.
தமிழகத்திலுள்ள எத்தனை அமைச்சர்கள், ‘நான் விலையுயர்ந்த காரில் செல்கிறேன். என்னுடைய மாவட்டத்தில், ஆரம்பத்திலிருந்து நான் பேசிப்பழகிய கட்சிக்காரர்கள், கட்சி நிர்வாகிகள் டூ வீலர் வாங்கக்கூட வசதியில்லாமல் சைக்கிளில் வருகிறார்களே..’ என்று சிந்தித்திருப்பார்கள். கே.டி.ராஜேந்திரபாலாஜியின் மனதில் அப்படி ஒரு கவலை ஏற்பட, விருதுநகர் மாவட்டம் முழுவதும், அதிமுகவினர் பலருக்கும் ‘ஆக்டிவா’ வாகனம் வாங்கித் தந்தார்.
சிவகாசியில் ரேடியோவும் கையுமாக சுற்றித் திரிவார் ஒருவர். அவரை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவருக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏதோ உதவி செய்திருக்கிறார். உடனே அந்த நபர் பிரபலமான தனியார் சேனல் ஒன்றில் “கே.டி.ராஜேந்திரபாலாஜி ஒரு வள்ளல். எம்.ஜி.ஆர். ஆவி இவருக்குள் புகுந்துவிட்டது. அதனால்தான், அந்த வள்ளல் குணம் இவருக்கும் வந்துவிட்டது.” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசி, அது ஒளிபரப்பாகிவிட, அவரை அழைத்த கே.டி.ராஜேந்திரபாலாஜி “ஏம்பா.. நீ சும்மா இருக்க மாட்டியா? புரட்சித்தலைவர் எங்கே? நான் எங்கே? இனிமேல் அப்படி பேசாத.” என்று கண்டித்திருக்கிறார்.
‘கே.டி.ராஜேந்திரபாலாஜி ரொம்ப நல்லவர்’ என்று அவரது அருமை பெருமைகளை எதற்காக இங்கே பட்டியலிட வேண்டியிருக்கிறது என்றால், ஸ்ரீவில்லிபுத்தூர் – மதுரை மெயின் ரோட்டில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள, இருவர் காயம் அடைந்தனர். அந்த வழியாக காரில் சென்ற கே.டி.ராஜேந்திரபாலாஜி விபத்தைப் பார்த்துவிட்டார். உடனே காரிலிருந்து இறங்கி, அவரே துண்டை எடுத்துக் கொடுத்து “ரத்தம் கொட்டுதுப்பா.. உடனே ஜி.எச்.சுக்கு கூட்டிட்டுப் போங்க.. நீங்க வச்சிருக்கிற பொருளெல்லாம் பத்திரமா இருக்கு. லேட் பண்ணாம கிளம்புங்க..: என்று காவல்துறையினரையும் துரிதப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அய்யன் திருவள்ளுவர் குறள் வாயிலாகச் சொல்கிறார் –
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
இதன் பொருள் – அன்பே உயிர்! அன்பின் வழியாகத்தான் உயிர் உடம்பில் நிலைத்திருக்கிறது. அன்பில்லாதவர்கள் எலும்பைத் தோலால் போர்த்திய வெறும் உடம்பைக் கொண்டவர்களே! அதாவது, அன்பில்லாதவன், உயிர் இருந்தும் இல்லாதவன் ஆவான்!
ஆதலினால், அன்பு காட்டுவோம்!