தர்மபுரி அரசு மருத்துவமனையில், பிறந்து ஒருநாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் ஹிந்தி அல்லது உருது மொழி பேசிய பெண்ணின் கைவரிசை உள்ளதால், வடமாநில கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாமோ என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாச்சானூரைச் சேர்ந்தவர் அருள்மணி (35). மரத்தச்சரான இவருடைய மனைவி மாலினி (19). இவர்களுக்குத் திருமணம் ஆகி ஓராண்டாகிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாலினி, கடந்த 18ஆம் தேதி மாலை 4 மணியளவில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் (ஜூன் 19) இரவு 7 மணியளவில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அதற்கடுத்த நாள் காலையில் குழந்தை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மாலினி கழிப்பறைக்குச் சென்றிருந்தார். பின்னர் அவர் படுக்கைக்கு வந்து பார்த்தபோது அங்கு தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் தூக்கிச் சென்றார்களா என்று விசாரித்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. கதறித்துடித்த அவர் உடனடியாக தன் கணவர், பெற்றோர்களுக்குத் தகவல் அளித்தார்.
இதுகுறித்து மாலினி அளித்த புகாரின்பேரில் தர்மபுரி டிஎஸ்பி அண்ணாத்துரை, நகரக் காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனடியாக விசாரணையை முடுக்கிவிட்டனர். மாவட்ட எஸ்பி கலைச்செல்வன், அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்துவிட்டுச் சென்றார். மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். பிரசவ வார்டில் இருந்து வெளியே சென்ற, இளஞ்சிவப்பு நிறத்தில் நைட்டி உடை அணிந்திருந்த ஒரு பெண், மாலினியின் குழந்தையைத் தூக்கிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. மற்றொரு கேமராவை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான அந்தப் பெண் குழந்தையுடன் அரசு மருத்துவமனக்குப் பின்பக்கமாக உள்ள வெண்ணாம்பட்டி சாலையில் சென்றதும் பதிவாகியிருந்தது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்மப் பெண், நேற்று முன்தினம் (20.06.2021) காலை வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகே குழந்தையை ஒரு துணியில் சுற்றி தூக்கிச் சென்றதும் தெரியவந்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க டிஎஸ்பி அண்ணாத்துரை, காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தை கடத்தல் பின்னணியில் நன்கு தேர்ந்த கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு உள்ளே செல்ல, வெளியே செல்ல இருக்கும் அனைத்து வழித்தடங்கள், தர்மபுரி நகரப்பகுதியின் வழித்தடங்கள், சந்து பொந்துகளை நன்கு தெரிந்தவர்கள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்கிறார்கள்.
யாரிடமும் பிடிபட்டுவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் குழந்தையைப் பிரசவ வார்டில் இருந்து தூக்கிக்கொண்டு, மருத்துவமனையின் பின்பக்கமாக வெண்ணாம்பட்டி சாலை வழியாக வெளியேறி இருக்கிறார் மர்மப்பெண். அங்கிருந்து சின்னச்சின்ன சந்துகளில் புகுந்து நான்கு சாலையை நோக்கிச் சென்றிருக்கிறார். அதனால்தான் வழியில் வேறு எங்கும் சிசிடிவி ஃபுட்டேஜ்கள் கிடைக்காமல் காவல்துறையினரும் குழம்பிப் போயிருக்கிறார்கள். இடையில் கணேஷ் திரையரங்கம் அருகில் இருந்தும், ராஜகோபால் பூங்கா அருகில் இருந்தும் இரண்டு சிசிடிவி கேமராக்களில் அந்த மர்மப்பெண், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருடன் குழந்தையைத் தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரண்டு வீடியோ ஃபுட்டேஜ்களையும் ஆய்வு செய்தபோது இரண்டுக்கும் இடையில் ஓரிடத்தில், அந்த மர்மப்பெண் மட்டும் நடுவிலேயே இறங்கிச் சென்றுவிட்டதும் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ராஜகோபால் பூங்கா அருகில் உள்ள கடைகளில் குழந்தைக்குத் தேவையான டயாபர், துணிமணிகளை மர்மப்பெண் வாங்கியுள்ளார். அப்பகுதியில் இருந்த வாடகை கார் ஓட்டிகளிடம் விசாரித்தபோது, அருகில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் அந்தப் பெண் வந்திருக்கலாம் எனக் கருதியதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
பின்னர் அந்தப் பெண், ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றுவிட்டார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. அந்த மர்மப் பெண், ஹிந்தி அல்லது உருது மொழியில் பேசியதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. குழந்தைக்கு டயாபர் வாங்கியது, ஆட்டோவில் ஏறிச்சென்றது உள்ளிட்ட சம்பவங்கள் எல்லாமே 20ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிக்குள் நடந்துள்ளன.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், குழந்தையைக் கடத்திச்சென்ற மர்மப்பெண், அவரை மோடடார் சைக்களில் அழைத்துச் சென்ற வாலிபர் ஆகியோரின் முகங்களும் தமிழ்நாட்டு முகங்கள்போலத்தான் தெரிகின்றன. அதேநேரம், குழந்தையைக் கடத்திய பெண் ஹிந்தி அல்லது உருது மொழியில் பேசியதாக கிடைத்த தகவலை வைத்துப் பார்க்கையில், அவர்கள் பீஹார் உள்ளிட்ட வடமாநில கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம். எப்படி இருப்பினும், வெகு விரைவில் குழந்தையைக் கடத்தியவர்களைக் கைது செய்துவிடுவோம். குழந்தையையும் பத்திரமாக மீட்போம்,'' என்றனர்.
இது ஒருபுறம் இருக்க, குழந்தையைப் பறிகொடுத்த மாலினி தம்பதியும், உறவினர்களும் குழந்தையைக் கடத்தியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி நேற்று (ஜூன் 21) தர்மபுரி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு மறியல் செய்ய முயன்றனர். தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களை அழைத்து சமாதானம் செய்தனர். கடத்தல் கும்பலை விரைவில் கைது செய்துவிடுவதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து உறவினர்கள் மறியல் போராட்த்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
தர்மபுரி அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவுக்குள் பிரசவத்திற்கு வந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட உறவினர்கள், உதவியாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், பட்டப்பகலில் துணிகரமாக குழந்தை கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் இப்படியொரு துணிகரச் சம்பவம் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே மகப்பேறு பிரிவில் பலமுறை மருத்துவர்கள், செவிலியர்களின் செல்ஃபோன், பணம், நகைகள் திருடு போயுள்ளன. அப்போதும் அந்தச் சம்பவங்ளின் மீது மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் தொடர் நிகழ்வாகத்தான் இப்போது குழந்தை கடத்தலும் நடந்திருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.