கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சாத்தப்பாடி, பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பூவாலை, குறிஞ்சிப்பாடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் மழை வெள்ளத்தினால் சேதமடைந்த விளைநிலங்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க பூவாலை கிராமத்திற்கு வந்தார்.
பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட காரில் வந்த அவர், பூவாலை கிராமத்திலிருந்து டிராக்டரில் ஏறி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள வயல் பகுதிக்குச் சென்றார். பின்னர் வயலில் தண்ணீர் மூழ்கிய பகுதிகளில் இறங்கியவர், வயலில் மூழ்கிய நெற்பயிர்களைப் பார்வையிட்டு பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மீண்டும் டிராக்டரில் செல்லும்போது சிறிது தூரம் டிராக்டரை அண்ணாமலையே ஓட்டிச் சென்றார்.
அண்ணாமலை ஓட்டிச்சென்ற டிராக்டரில், வெள்ளை காகிதத்தில் நம்பர் பிளேட் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இந்த ஆய்வின்போது அவருடன் 20க்கும் மேற்பட்டவர்கள் நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த நம்பர் பிளேட் விவகாரம் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
முன்னதாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் அவர் படகில் சென்ற சம்பவம் வைரலாகியது. இதனையடுத்து பூவாலையில் டிராக்டர் ஓட்டிய சம்பவமும் சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.
இந்த ஆய்வு பயணத்தின்போது, கடலூர் சிறையில் உள்ள பாஜக கட்சி நிர்வாகியான கல்யாணராமனை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது சிறை அலுவலர்கள் சனி, ஞாயிறுகளில் கைதிகளைப் பார்ப்பதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்துவிட்டனர்.