Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

Published on 03/09/2024 | Edited on 03/09/2024
Annamalai University professors Union Demonstration

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விளக்கக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன்பு திங்கள்கிழமை(2.9.2024) மாலை நடைபெற்றது. 2019ம் ஆண்டு சி.ஏ.எஸ் பதவி உயர்வு தேர்வுக்குழுவை மாற்றியமைக்கூடாது என வலியுறுத்தி இந்த கோரிக்கை விளக்கக் கூட்டம் மற்றும்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் பி.செல்வராஜ், டி.அசோகன், தனசேகரன், செல்ல பாலு, பி.கார்த்திகேயன், பி.சுதாகர், எஸ்.வாசுதேவன், பி.ரொனால்டுரோஸ், கே.ராமு, எம்.பரனி, ஜான் கிருஷ்டி ராபர்ட் என்.ராசேந்திரன், கே.செல்வகுமார், அஸ்கர் அலி படேல் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினார். பின்னர் நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

பின்னர் ஒருங்கிணைப்பாளர் சி.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிச்சிக்கலால் அரசு பொறுப்பேற்ற  8 ஆண்டுகளுக்குப் பிறகே ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தேர்வுக்குழு என்பது நடத்தப்பட்டு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. அதிலும் தகுதிபெற்ற நாளிலிருந்து  பணப்பயன்களை வழங்காமல் 01.06.2019 முதல் கணக்கிட்டு வழங்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ரூ 5 முதல் 10 லட்சம் வரை  இழப்பு ஏற்பட்டது. வேறு பல்கலைகழகத்தில் இருந்து வந்த அன்றைய துணைவேந்தர் பேராசிரியர்  வி.முருகேசன் பதவி உயர்வு வழங்கப்பட்டது. 

யுஜிசி விதிமுறைகளின்படி  ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டிய பதவி உயர்வுகள் 2019 பிறகு இன்றுவரை நடத்தப்படவில்லை. கடந்த 2017 முதல் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்படி  அமைக்கப்பட்ட நிதிக்குழு, ஆட்சிக்குழுவில்  அங்கீகரிக்கப்பட்ட  பதவி உயர்வுகளை வழங்கும் சி.ஏ.எஸ் போர்டை தற்போது உள்ள நிதிக்குழு  மற்றும் ஆட்சிக்குழு மாற்றியமைக்க முயற்சி செய்யாது என நம்புகிறோம். யுஜிசி விதிமுறைகளின் படி ஒரு தேர்வுக்குழுவில் தேர்வு பெற இயலாத  ஆசிரியர்கள் அடுத்த ஒரு ஆண்டுக்குள் வாய்பளிக்கபபட்டு பதவி உயர்வுகள் வழங்கிட வேண்டும். அந்த வாய்ப்பை  இந்த நிர்வாகம் எவருக்கும் வழங்காத நிலையில் 5 ஆண்டுகள் கழித்து  ஏற்கெனவே வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை ரத்து செய்ய முயல்வது ஆசிரியர் நலனுக்கு முற்றிலும்  விரோதமானது.  

ஆகவே  2019 ஆம் ஆண்டு பதவி உயர்வு தேர்வுக்குழுவைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு  அப்படியே எவருக்கும் எந்த பாதிப்பும்  இன்றி அங்கீகரிப்பதுடன் அதில் பதவி உயர்வு கிடைக்காதவர்கள்  எவரும் இருந்தால் சிறப்புத் தேர்வுக்குழு நடத்தி இன்றைய தேதி வரை தகுதி பெற்ற அனைவருக்கும் பதவி உயர்வுகள்  வழங்கிட வேண்டுகிறோம் என ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி.சுப்ரமணியன் கூறினார்.
 

சார்ந்த செய்திகள்