சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கையை மாநில மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு மூலம் நடத்தி வந்தது தமிழக அரசு. இருப்பினும் அதன் நிர்வாக அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.
அதேசமயம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளை அரசு ஏற்கும் என கடந்த வருடம் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவையில் நேற்று (5.2.2021), அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி ஆகிய அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதன்படி மேற்கண்ட மூன்று கல்லூரிகளும் தமிழக சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப பல்கலைக்கழகத்தின் சட்டவிதிகளும் திருத்தப்பட்டுள்ளன.