சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது பல்கலைக்கழகத்தை அரசு முழுக் கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வகித்து வருகிறது.
அப்போது பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் பணியாகத் தமிழக அரசு சார்பில் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார். அப்போது இவர் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்தும் அவர்கள் கல்வி குறித்தும் ஆய்வு செய்தபோது பேராசிரியருக்குத் தேவையான கல்வித் தகுதி இல்லாமல் இருந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.
பின்னர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் துணைவேந்தர் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டபோது தகுதி இல்லாத உதவி பேராசிரியர்கள் குறித்து தெரியவந்தது. தகுதி இல்லாத பேராசிரியர்கள் 56 பேரை இன்று உயர் கல்வித்துறை உத்தரவின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் பெரும்பான்மையான அளவில் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்து திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக கல்வி பயின்றும் பிஹெச்டி இல்லாமல் உதவி பேராசிரியராகப் பணியில் இருந்தும் வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர் தரப்பில் மொத்தம் 80க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாகத் தணிக்கையில் தெரியவந்தது. இதில் சிலர் எங்களுக்கு எந்த பதவி உயர்வும் வேண்டாம் இதிலேயே இப்படியே இருக்கிறோம் எனக் கடிதம் கொடுத்துள்ளதால் அவர்கள் தகுதி இல்லாமல் இருந்தும் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இதுபோன்று செய்வது வருத்தம் அளிக்கிறது. அதேபோல் உதவி பேராசிரியருக்குத் தகுதி இல்லாத எங்களை பணி அமர்த்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். எனவே இது குறித்து நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட்டு வெற்றி பெறுவோம் என்கின்றனர்.