தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது. இந்நிலையில், இன்று (06.09.2021) காலை அவை தொடங்கியதும் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். அதன்படி பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, இனிவரும் ஆண்டுகளில் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு அவையில் இருந்த அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன. குறிப்பாக பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, கடவுள் நம்பிக்கை இருக்கின்ற கட்சியாக பாஜக இருந்தாலும், பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடுவதை தாங்கள் வரவேற்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாக கொண்டாடுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அவருக்கு முன்பே சமூகநீதி பேசிய பாரதியார், வ.உ.சி. ஆகியோரின் பெயர்களை இருட்டடிப்பு செய்யக் கூடாது” என்றார்.