ஜல்லிக்கட்டு பேரமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில் மத்திய அரசு அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமானத்துறையினரை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதையடுத்து அமைச்சர் உதயநிதியின் குற்றச்சாட்டு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அண்ணாமலை பேசுகையில், ”அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினர் பற்றி பேசும் போது மின்விசிறி கழன்று ஹோம் கார்டு காவலர் மீது விழுந்துவிட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் ஆண்டவனே சொல்கிறான் அமைச்சர் சொல்வது பொய் என்று. அதனால் திமுகவினர் மத்திய அரசு அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித் துறையினரை தவறாக பயன்படுத்துதல், ஊழல் பற்றி பேச எந்தவிதமான தகுதியும் இல்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டைத் திரும்பக் கொண்டு வந்தார்கள் அதனை பாராட்டுகிறார்கள் என்பது எப்படி இருக்கிறது என்றால் மு.க.முத்துவிற்கு மேக்கப் போட்டு எம்.ஜி.ஆர். என்று சொல்வது போன்று உள்ளது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா. உதயநிதி ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் ஜல்லிக்கட்டை திரும்பக் கொண்டு வந்தார்கள் என்று சொல்கிறார். திமுகவினருக்கும், ஜல்லிக்கட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்ததற்கு ஒரே ஒருத்தர் தான் காரணம். அது பிரதமர் நரேந்திர மோடி தான். அதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரதமர் மோடியை சிறப்பு அழைப்பாளராக அழைக்க உள்ளோம். அவர் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக மக்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றால் அது பிரதமருக்குத் தான் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.