செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பயனாளி அஸ்வினியின் அழைப்பை ஏற்று, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, "சகோதரி அஸ்வினி இல்லத்திற்கு முதலமைச்சர் சென்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது! அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது என்பது தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாடு! மத்திய அரசினுடைய முத்ரா கடன் திட்டத்தையும், சுவா நிதி திட்டத்தையும் அஸ்வினி அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்காக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்!
பிரதமர் நரேந்திர மோடியுடைய அனைத்து திட்டங்களும் சகோதரி அஸ்வினி போன்றவர்களுக்குத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் மக்களுக்கு இதேபோல் நேரடியாக எடுத்துச் செல்வார் என்று நம்புகின்றோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.