ஆளுநர் விழாவில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மட்டுமே வருகைப் பதிவு என அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், இவ்விழாவின் பார்வையாளர்களாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்க உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆளுநர் விழாவில் அதிக மாணவர்களைப் பங்கேற்க செய்யும் வகையில் விழா அரங்கிலேயே வருகைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரங்கிற்கு உள்ளே சென்று விழாவிற்கு வரும் மாணவர்களுக்கு மட்டுமே வருகைப் பதிவு கொடுக்கப்படும் படி அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.