அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில், உதவிப் பேராசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்று பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல அளவிலான பல்கலைக்கழகங்கள் 2008-09- ஆம் ஆண்டில் திருச்சி, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலியில் துவங்கப்பட்டன.
இந்த பல்கலைக்கழகங்களில், தற்காலிக மற்றும் நிரந்தர அடிப்படையில் 899 உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர், 2011-ல் அவற்றை ஒன்றாக இணைப்பதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டது.
தற்காலிக அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கு பணிநீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், சிலரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில், 2019- ஆம் ஆண்டு, தற்காலிக அடிப்படையில் உதவி பேராசியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஒப்பந்த ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யவும், ஒப்பந்த அடிப்படையில் புதியவர்களை நியமிக்க தடைவிதிக்கக்கோரியும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்யக்கோரியும், உதவி பேராசிரியர் கண்ணன் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், ‘ஒப்பந்த அடிப்படையில் 310 பேரும், நிரந்தர அடிப்படையில் 13 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 3 மண்டல வளாகங்களில் 556 பேரும் பணியாற்றி வருகின்றனர். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளின்படி, 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற அடிப்படையில், 25 ஆயிரத்து 680 இளங்கலை மாணவர்களுக்கு ஆயிரத்து 284 பேராசிரியர்களும், ஆயிரத்து 806 முதுகலை மாணவர்களுக்கு 120 பேராசிரியர்களும் என, ஆயிரத்து 404 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். தற்காலிக பேராசிரியர்களை நீக்கிவிட்டு, மீண்டும் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி, இதுதொடர்பாக 2019-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யப்படுகிறது’ எனத் தீர்ப்பளித்துள்ளார்.
மேலும். மனுதாரர்கள் உள்ளிட்ட 310- க்கும் மேற்பட்டோர், தற்காலிக அடிப்படையில் உள்ளதால், பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டால், பல்கலைக்கழகத்திற்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், போதிய தகுதியும் அனுபவமும் உள்ள மனுதாரர் போன்றவர்களை, நிரந்தர பணியில் காலியிடம் ஏற்படும்போது நியமிக்கலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மனுதாரர் உள்ளிட்டோரை, டிசம்பர் 1-ஆம் தேதி முதல், தற்காலிக பணியாளர்களாக பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு நிரந்தர உதவி பேராசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.