Skip to main content

அனிதாவைக் கொலை செய்த “நீட்”டை விலக்குவதுதான் அவருக்கு நாம் செய்யும் கைமாறு: வேல்முருகன்

Published on 04/09/2017 | Edited on 04/09/2017
அனிதாவைக் கொலை செய்த “நீட்”டை விலக்குவதுதான் அவருக்கு நாம் செய்யும் கைமாறு: வேல்முருகன்

அனிதாவைக் கொலை செய்த “நீட்”டை விலக்குவதுதான் அவருக்கு நாம் செய்யும் கைமாறாகும் என்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நீட் தேர்வால் மாணவி அனிதாவுக்கு ஏற்பட்ட மரணம் தற்கொலை அல்ல, கொலை! ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் சேர்ந்து நடத்திய படுகொலை; அதாவது நடுவண் பாஜக மோடி அரசு, தமிழக அதிமுக எடப்பாடி அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை நடத்திய கூட்டுக் கொலை!

இதைத் தற்கொலை என்பார்களானால் அப்படிச் சொல்பவர்களும் இந்தக் கொலைக்கு உடந்தையானவர்களே!

அனிதாவின் படுகொலைக்குக் காரணமே மாநில அதிகாரங்கள் பட்டியல் பிரிவு-11ல் இருந்த கல்வியை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பொதுப் பட்டியலுக்கு எடுத்துக் கொண்டதுதான். தன் சொந்த காரணங்களுக்காக அவசர நிலை பிறப்பித்த அந்த சர்வாதிகாரி, 1976 டிசம்பர் 18ல் அரசியல் சாசன 42ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் இதைச் செய்தார். மருத்துவக் கல்வி உள்பட உயர்கல்வித்துறையே மாநிலங்களின் கைவிட்டுப் போனது.

2013ல் இந்திய மருத்துவக் கவுன்சில் “நீட்” நுழைவுத் தேர்வை அறிவித்தது. இது சிறுபான்மையினர் கல்வி நிறுவனத்தில் தலையீடு செய்வதாகும் என இதனை எதிர்த்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்ததில், நீதிபதி அனில் தவே தவிர நீதிபதிகள் அல்டாமஸ் கபீரும் விக்கிரம்ஜித் சென்னும் கிறிஸ்தவக் கல்லூரிக்கு ஆதரவாக “நீட்”டை விலக்கித் தீர்ப்பளித்தனர்.

பிறகு அனில் தவே தவிர நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென் இருவரும் ஓய்வுபெற்றுவிட, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது இந்திய மருத்துவக் கவுன்சில். இதனை விசாரித்த அனில் தவே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு, “நீட் கட்டாயம்; அடுத்த கல்வியாண்டிலிருந்து அமல்படுத்த வேண்டும்” என 2016ல் ஏப்ரல் 11ல் தீர்ப்பளித்தது.

அப்போது இந்த 2016 – 17 கல்வி ஆண்டுக்கு மட்டுமாவது “நீட்”டிலிருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழகமும் வேறு சில மாநிலங்களும் கேட்க, இது ஏற்கப்பட்டது.

அதேசமயம் அப்போது “நீட்டிலிருந்து நிரந்தரமாக விலக்கு வேண்டும்” என்று தமிழகம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதா என்பதை தமிழக அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்திய அரசியல் சாசனத்தின் 251ஆவது பிரிவு, “மாநில அரசின் உத்தரவுகளும் சட்டங்களும் மத்திய அரசின் உத்தரவுகளுக்கும் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டவை” என்கிறது.

இதற்கு விதிவிலக்குள் சொல்லப்பட்டிருப்பினும் “அரசு” என்பதற்குரிய சட்டமியற்றும் முதன்மை அதிகாரமின்றி தமிழக சட்டமன்றம் வெறும் மசோதா மன்றமாக இருப்பதே கசப்பான உண்மை.

இப்போது மாணவி அனிதாவின் மரணத்தால், நீட்டை விலக்க தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியான போராட்டம் வெடித்துள்ளது. அதில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இணைந்துள்ளது.

அதேநேரம் போராட்டங்கள் குறித்த மோடி அரசின் அணுகுமுறையை சல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் பார்த்தோம்; இப்போது மாதக்கணக்கில் நடைபெற்றுவரும் நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களிலும் பார்க்கிறோம்.

சல்லிக்கட்டுகூட தமிழ்நாட்டில் மட்டும்தான் நடத்த முடியும்; பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் நினைத்தால் அங்கெல்லாம் சல்லிக்கட்டு நடத்த முடியாது. எனவே சல்லிக்கட்டுப் போராட்டத்தினால் சல்லிக்கட்டுக்கு முழு சுதந்திரமோ விடுதலையோ கிடைத்துவிடவில்லை என்பதுதான் உண்மை.

எதனால் இப்படி என்று எண்ணிப் பார்க்க வேண்டும்; அதற்குரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

தமிழகத்தின் பிரச்சனைகளுக்கெல்லாம் நடுவண் அரசே காரணமாய் இருக்கும்போது அதற்கான போராட்டங்களை எப்படி அது கண்டுகொள்ளும்?

எனவே தமிழ்நாட்டின் தன்னாட்சிக்கான போராட்டம்தான் பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வாக இருக்க முடியும்; இதுவே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுதியான நிலை!

அதன் மூலமே கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர முடியும்; அனிதாவின் மரணம் போன்று இனி நடக்காமல் தடுக்க முடியும்; நடந்துவிட்ட அவரது மரணத்திற்கும் நீதியைப் பெற முடியும்; எல்லாவற்றுக்கும் மேலாக இதுவே அனிதாவுக்கு நாம் செய்யும் கைமாறாகும் என்பதையே வலியுறுத்திச் சொல்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்