Skip to main content

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ.

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே 
பொறுப்பேற்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா, நீட் தேர்வால் தனது மருத்துவக் கனவு கானல் நீராகிப் போனதை தொடர்ந்து இன்று அவர் தற்கொலை செய்துகொண்டு தன்னுயிரை மாய்த்துள்ளார். நீட் விலக்கிற்காக உச்ச நீதிமன்ற படிகட்டுகள் வரை ஏறிய மாணவி அனிதாவின் தற்கொலை செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. மாணவி அனிதாவின் மரணத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த ஏழை மாணவி அனிதா, மருத்துவக் கனவுடன், குடும்ப வறுமைக்கிடையிலும் கடின உழைப்பு மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். அவரது கடின உழைப்பால் சிறந்த மருத்துவக் கல்லூரியில் இடம் பெறும் அளவுக்கு 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்களையும் அவர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசு பாடத்திட்டத்தின் அடிப்படையிலான நீட் தேர்வின் மூலமாகத் தான் மருத்துவக் கல்வி சேர்க்கை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற 92 சதவீத மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் குறிப்பாக கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு பாதிக்கப்படும் இதனால் தமிழகம் பின்பற்றிவரும் சமூக நீதிக்கொள்கை கேள்விக்குள்ளாகும் சூழல் உருவாகும் என்று பாஜகவை தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால், மத்திய பாஜக அரசோ விடாப்பிடியாக நீட் தேர்வை கொண்டுவந்தே தீருவோம் என தெரிவித்தது.

தமிழகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பை அடுத்து தமிழக அரசு நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. மேலும், நீட் அடிப்படையில் மருத்துவக் கல்வி சேர்க்கை தமிழகத்தில் நடைபெறாது என மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்திகளை அவ்வப்போது தெரிவித்து வந்தது. வாரம் தோறும் அவர்கள் மேற்கொள்ளும் டெல்லி பயணத்தின் நோக்கமும் இது தொடர்பாகத்தான் என தெரிவித்தும் வந்தனர். ஆனால், மத்திய அரசோ தமிழகத்தின் மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டு நீட் தேர்வை நடத்த தயாரானது. இதனால் மாணவர்கள் நீட் எழுத வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

வசதி படைத்த மாணவர்கள் லட்சங்களை செலவு செய்து நீட் தேர்வுக்கான பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்ட வேளையில், அனிதா போன்ற ஏழை மாணவ-மாணவிகள் தாங்கள் கற்ற மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பாடங்களை மட்டுமே படித்து நீட் தேர்வை எழுதினர். விளைவு அனைவரும் எதிர்பார்த்தது போன்று ஏழை மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும் ப்ளஸ்-2 தேர்வில் அதிகமான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட்டில் தோல்வியடைந்தனர்.

இதையடுத்து தமிழக மாணவர்களுக்கு எப்படியேனும் நீட்டிலிருந்து விலக்கு பெற்று தருவோம் என மீண்டும் நம்பிக்கை விதைகளை தூவிய தமிழக அரசு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது போன்று, ஓர் ஆண்டு விலக்கு அளிக்கும் வகையில் அவசர சட்ட வரைவை மத்திய அரசுக்கு அனுப்பியது. எனினும் தமிழக நலனை விரும்பாத மத்திய அரசு நீட் விலக்கு அளிக்க மறுத்து விட்டது.

இதையடுத்து தமிழக அரசு எப்படியேனும் நீட் விலக்கை பெற்று தங்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கிவிடும் என எதிர்பார்த்த எழை எளிய மாணவர்கள் மனமுடைந்து போயினர். அப்படி மனமுடைந்து போன மாணவர்களில் ஒருவரான மாணவி அனிதா இன்று தன்னுயிரை மாய்த்துள்ளார்.

ஜனநாயக அமைப்பின் அனைத்து படிகட்டுகளையும் ஏறி, இறங்கியும் தனது மருத்துவக்கனவை நிறைவேற்ற முடியவில்லையே; ஏழை மாணவியான நாம் தகுதிக்கு மீறி மருத்துவக் கல்வி கனவை எதிர்பார்த்து விட்டோமோ; இந்த அரசும், நீதித்துறையும் ஏழைகளுக்கு நம்பிக்கையளிக்கும் என தவறாக நினைத்துவிட்டோமோ என்ற மனக்குமுறலுடன் மாணவி அனிதா இந்த துயர முடிவை எடுத்துள்ளார்.

இது தற்கொலை அல்ல, நீட் எனும் பயங்கரவாத அரக்கனால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனப் படுகொலை. இந்த படுகொலைக்கு தமிழக விரோத மத்திய அரசும், தமிழக உரிமையை தக்கவைக்க முடியாத மாநில அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக மாணவர்களை நம்பவைத்து ஏமாற்றிய மத்திய, மாநில அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க உடனடியாக நீட் விவகாரத்தில் மாநில அரசு உயிரோட்டமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 

தற்கொலை முடிவு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத, ஆரோக்கியமான முடிவல்ல என்றாலும், மாணவி அனிதாவின் தற்கொலைக்கான காரணிகளை ஒருபோதும் மறுத்துவிட முடியாது. அரசு மற்றும் நீதித்துறைக்கு அழுத்தம் தரவல்லது மக்கள் புரட்சி என்பதை கருத்தில்கொண்டு, இதுபோன்ற தற்கொலை எண்ணங்களை தவிர்த்துவிட்டு, சமூக நீதிக்கொள்கைக்கெதிராக பேசுவோரை புறந்தள்ளிவிட்டு, ஜனநாயக வழியிலான ஒரு பெரும் போராட்டத்திற்கு மாணவர்களும், மக்களும் தங்களை தயார் செய்துகொள்ள முன்வரவேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்