தேசத்தின் பன்முகத் தன்மையை காப்போம்! எஸ்.டி.பி.ஐ. சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டிருக்கும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திய அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, 71 வது சுதந்திர தினத்தில் நமது நாடு அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நாளில் சாதி, மதம், மொழி, இனங்களை கடந்து நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நாம் நினைவுகூர்வோம். அவர்களின் தியாகத்தை நாம் போற்றுவோம்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திலிருந்து நாடு விடுதலை பெற்றாலும், தற்போது ஆளும் பாஜக அரசின் சர்வாதிகார பாசிச கொள்கையால், தலித், சிறுபான்மை மக்கள் உட்பட நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கியதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சரிவை சந்தித்துள்ளன. தற்போது ஜி.எஸ்.டி. மூலமாக மீண்டும் மக்கள் மீது அரசின் வன்மம் பாய்ந்துள்ளது. இதனால் தேசத்தின் சுதந்திர காற்றை சாமானிய மக்கள் சுவாசிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அதேவேளையில், மறுபுறம் அரசின் துணையோடு வலம்வரும் மதவெறி சக்திகள் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருவதோடு, வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. மாட்டின் பெயரால் பசு பாதுகாவலர்கள் போர்வையில் அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர்.
தற்போது நாட்டில் நடைபெறும் சகிப்பின்மைக்கு எதிரான சம்பவங்கள் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பாற்ற சூழலையும், நாட்டில் அமைதியின்மையை உருவாக்கியுள்ளதாகவும், நாட்டின் பன்முகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சிந்தனைகளும் எழுந்திருப்பதாக முன்னாள் துணை ஜனாதிபதி ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரின் இந்த கருத்தை நாட்டின் நலனில் அக்கறை கொண்ட எவரும் மறுக்க முடியாது. இத்தகைய பாசிச போக்கு தேசத்தின் நலனை வெகுவாக பாதிக்கும்.
அதேபோன்று இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்ற கொள்கையோடு நாடு முழுவதையும் தங்கள் கீழ் கொண்டுவரவும், அரசியல் வெற்றிக்காகவும், அரசு இயந்திரங்கள் துணை கொண்டும், பணபலம், அதிகார பலத்தை துணை கொண்டும், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் ஜனநாயக படுகொலைகளும் அரங்கேறி வருகின்றன. ஜனநாயக வழியில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள், பெரும்பான்மை மமதையில் ஜனநாயகத்தையே படுகொலை செய்வதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இத்தகைய சர்வாதிகார பாசிச போக்கு நமது நாட்டின் ஜனநாயக அமைப்பை, பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் என்பதால் அதற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகும். ஆகவே, சாதி, மதங்களை கடந்து நாம் தேசத்தின் பன்முகத் தன்மையை காக்க இந்நாளில் உறுதியேற்போம்.
மேலும், இந்நாளில் வறுமை, ஏழ்மை, சமூக தீங்குகள், குற்றங்களுக்கு காரணமான மதுவினை முழுமையாக தடை செய்திடவும், மதவாதம், தீண்டாமை, கலவரம் ஆகியன இல்லாத நாடாக மாற்றிடவும், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நம் நாடு முன்னேற்றம் அடையவும், சாதி, மத ஏற்றத் தாழ்வுகள் அகன்று சகிப்புத் தன்மை அனைவரிடமும் வளர்ந்திடவும், உண்மையான ஜனநாயக மற்றும் மதச் சார்பாற்ற நாடாக நம் நாட்டை நிலைநிறுத்தவும் நாம் அனைவரும் சபதமேற்போம்.
இவ்வாறு அவர் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.