Skip to main content

அன்புமணி ராமதாசை மறைமுகமாக சாடும் கருணாஸ்!

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

 

எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், பூ உலகின் நண்பர்கள், விவசாயிகள், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் விடுத்துள்ள அறிக்கையில் அன்புமணிராமதாசை மறைமுகமாக சாடியுள்ளார்.

 

k

 

கருணாஸ் தனது அறிக்கையில், ’’சென்னை- சேலம் இடையே 5 மாவட்டங்கள் வழியாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.  இத்திட்டத்திற்கான தடைகோரிய வழக்கில் இன்று (8.4.2019) தடை விதித்து உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். இந்த வெற்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

 

இத்திட்டத்திற்காக 1,900 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறுவதற்கு முன்னே நிலம் அளவிடும் பணிகள் வேக வேகமாக தொடங்கப்பட்டன.


எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, விவசாயிகளும், பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தினார். மக்கள் போராட்டம் தொடர்ந்து நடந்தேறிய அதே சமயம் பூவுலகின் நண்பர்கள், ஐந்து மாவட்ட விவசாயிகள் சார்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.

அதன் விளைவாக தமிழக அரசு செயல்படுத்த நினைத்த எட்டுவழிச்சாலை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நில உரிமையாளர்களுக்கே பத்திரப்பதிவு செய்து கொடுக்க நீதிமன்றம் உத்தர பிறப்பித்துள்ளது இது வரவேற்கத்தக்கது.

 

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அ.தி.மு.க. பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் எட்டுவழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என முழங்கிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இத்தீர்ப்பை மக்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 

இந்த திட்டத்தை நிறைவேற்ற நினைத்தவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டுள்ள கட்சிகள், ”இந்த திட்டத்திற்கு தடை விதிக்க நாங்கள்தான் போராடினோம்” என்று தேர்தல் நேரத்தில் பேசினால் மக்கள் சிரித்துவிடுவார்கள். ஆகவே இது மக்கள் போராட்டத்திற்கான வெற்றி! இதை தனிநபர் யாரும் உரிமைகோரி அதை வாக்குகளாக மாற்றிட முயற்சி செய்தால் அதைவிட இழிவானச் செயல் வேறொன்றும் கிடையாது!’’ என்று கூறியுள்ளார்.  


எட்டுவழிச்சாலைக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பிற்கு பின்னர், அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்து வரும் பேட்டியில், விவசாயிகளூக்கு எதிரான எந்த ஒன்றையும் பாமக ஏற்காது.  அதனால்தான் எட்டுவழிச்சாலைக்கு எதிராக பாமக வழக்கு தொடர்ந்தது.   தமிழக அரசு மேல்முறையீடு செய்தால்.  பாமக கேவியட் மனு தாக்கல் செய்யும்’’ என்று கூறி வருகிறார்.  பாமகவினர் தீர்ப்பை வரவேற்று வெடி வெடித்து வருகின்றனர்.  இந்நிலையில் கருணாஸ் அன்புமணியை மறைமுகமாக சாடியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்