Skip to main content

அனந்தபத்மநாபன் நியமன வழக்கு: அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

Published on 19/09/2017 | Edited on 19/09/2017
பேராசிரியர் அனந்தபத்மநாபன் நியமன வழக்கு:
அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் பேராசிரியர் அனந்தபத்மநாபன் நியமிக்கப்பட்டதற்கான அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் உச்சிமாகாளி தாக்கல் செய்த மனுவில் “அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைகழகத்துடன் ஏற்கனவே தொடர்புடையவர் குழுவில் நியனிக்கக்கூடாது என்ற விதிக்கு முரணாக அவர் தேர்வுசெய்யப் பட்டுள்ளதாகவும் , துணைவேந்தர் பதவிக்கான கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசு பிறப்பித்த இரு அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும், தேடுதல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்”  என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, கடந்த ஏப்ரல் மாதம் பேராசிரியர் அனந்தபத்மநாபன்  ராஜினாமா செய்த பின்பே ஜூன் மாதம் தான் அவரை குழுவில் சேர்த்ததாக தெரிவித்தார். மேலும், துணைவேந்தர் பதவிக்கான தகுதி குறித்த பல்கலைக்கழக மானிய குழு விதிகளை தமிழக அரசு ஏற்காத நிலையில் அதை பின்பற்றவில்லை என மனுதாரர் குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
  
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “இந்த வழக்கு காரணமாக, குழுவின் தலைவரான நீதிபதி லோதா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார் என்றும், இதனால் ஒரு நல்ல உறுப்பிநரை குழு இழப்பதாகவும் தெரிவித்தார்.
 
நீதிபதிகள் குறுக்கிட்டு பேராசிரியர் அனந்தபத்மநாபன் தனது பேராசிரியர் பணியை ராஜினாமா செய்த பின்னர்தான், குழுவில் உறுப்பினராக நியமித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது, ஆனால் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது உறுப்பினராக நியமிக்கப்பட்டதால் தான் பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளதாக உள்ள்தே? ஏன் இப்படி முரண்பாடான தகவல்கள் வருகிறது என கேள்வி எழுப்பினர்.
 
இதையடுத்து பேராசிரியர் அனந்தபத்மநாபன் நியமனம் தொடர்பான அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு (செப்டம்பர் 20) ஒத்திவைத்துள்ளனர்.
  
- சி.ஜீவா பாரதி


சார்ந்த செய்திகள்