அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அக்கட்சி தொண்டர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் தெற்கு மாவட்ட அமமுக சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வபாண்டி தலைமையில் நிலக்கோட்டை ஆத்தூர் தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செல்வபாண்டி ஏற்பாட்டில் வத்தலக்குண்டு அருகே ஜி.கல்லுப்பட்டி ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் 1500 பேருக்கு அன்னதானமும் நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில் டிடிவி பிறந்தநாளுக்காக நிர்வாகிகளும் தொண்டர்களும் அடித்த சுவரொட்டியில் சசிகலா படம் இல்லாததைக் கண்டு அதிமுகவினரே அதிர்ச்சி அடைந்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அடையாளமே சின்னம்மா என்ற போதிலும் ஏன் இந்த திடீர் மாற்றம் என அக்கட்சியின் மாநில பேச்சாளர் நசிம்மிடம் விசாரித்தபோது, “எங்கள் கட்சியின் இதயமே எங்க சின்னம்மாதான். எங்கள் பொதுச்செயலாளர் டிடிவி அண்ணனும் இந்த இயக்கத்தை வழி நடத்துவது சின்னம்மா தான் என்று தெரிவித்திருந்தார்.
இப்பொழுதும் சின்னம்மாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் எனவே அதிமுகவை மீட்க சின்னம்மா நடத்தும் போராட்டத்திற்கு தடை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சின்னம்மாவை இதயத்தில் சுமந்துகொண்டு போஸ்டரில் பிரசுரம் செய்வதைத் தவிர்த்து விட்டோம்” என்று விளக்கம் கூறினார். சமீபகாலமாக சசிகலா டிடிவி இடையே ஏற்பட்டுள்ள விரிசல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.