அதிமுக-வில் இருந்து திமுக மற்றும் அமமுக கட்சிக்கு சென்ற பிரமுகா்களை காவல் துறை திட்டமிட்டு பழைய வழக்குகளை தூசு தட்டி நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குமரி மாவட்டம் அதிமுக முன்சிறை முன்னாள் ஒன்றியச் செயலாளர் உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
களியக்காவிளை படந்தாலுமூடு சோ்ந்த உதயகுமாரும் கோழி விளையை சோ்ந்த பிரபல கஞ்சா வியாபாரியும் ரவுடியுமான ஜெயிலானியும் நெருங்கிய நண்பா்கள். ஜெயிலானி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. உதயகுமாரின் அரசியல் செல்வாக்கால் ஜெயிலானி மீது போலீசார் எந்த வழக்கிலும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனா்.
இந்த நிலையில் திடீரென்று உதயகுமாருக்கும் ஜெயிலானிக்குமிடையை பிரிவினை ஏற்பட்டு அது முன் விரோதமாக நீடித்து வந்தது. இதில் கடந்த 8.8.2019 அன்று உதயகுமார் தனது மனைவியான களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் தலைவி ஆஷா டயானாவின் காரை கொண்டு படந்தாலு மூட்டில் வைத்து பைக்கில் வந்த ஜெயிலானி மீது மோதி கொலை செய்தார். இதை அப்போது போலீசார் விபத்தாக மாற்றி உதயகுமாரை தப்பிக்க வைத்தது விட்டனர். ஜெயிலானியின் மகன் ஜனீப் இது திட்டமிட்ட கொலை என புகார் கொடுத்தும் போலீசார் அதைக் கண்டு கொள்ளவில்லை.
இதற்கிடையில் அதிமுக-வில் இருந்த உதயகுமார், முன்னாள் அமைச்சா் பச்சைமாலுடன் அமமுக-வுக்கு சென்றார். கொஞ்ச நாளில் பச்சைமால் மீண்டும் அதிமுக வில் ஐக்கியமானார். ஆனால் உதயகுமார் அதிமுகவில் இணையாமல் மனம் வெறுத்த நிலையில் அமமுக-வில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் ஜெயிலானி வழக்கை தூசு தட்டிய போலீசார், அது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என மாற்றி உதயகுமாரை நள்ளிரவு தக்கலை டிஎஸ்பி ராமசந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனா். இது அமமுக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.