தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை எம்மா கிழவிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் வின்சென்ட்ராஜ். இவருக்கு 32 வயதாகிறது. இவர், ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மேலும், அந்தப் பகுதியின் அமமுக கட்சியின் எம்ஜிஆர் மன்றச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார். இதனால், அந்தப் பகுதியில் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட நபராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், வின்சென்ட்ராஜ் வசித்து வரும் தெருவில், இவர் வீட்டிற்கு அருகில் ஒரு குடும்பம் உள்ளது. அந்த வீட்டில் யாரும் இல்லாதபோது, 35 வயதுடைய ஒரு பெண் மட்டும் அங்கு இருந்திருக்கிறார். திருமணமான அந்தப் பெண்ணின் கணவர் உட்பட அனைவரும் வேலைக்குப் போயிருந்ததால், அவர் மட்டும் சமைத்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அந்தப் பெண்ணின் வீட்டில் திடீரென லைட் ஆஃப் ஆகியுள்ளது. இதனால் அவர் செய்வதறியாது திகைத்துள்ளார். பகல் நேரமாக இருந்தாலும் லைட் இல்லாததால், அந்த வீடே இருண்ட மாதிரி காட்சியளித்துள்ளது.
இதனால், அந்த பெண்ணே லைட்டை சரி செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை. அப்போது, வீட்டிலும் யாரும் இல்லாததால் அக்கம் பக்கத்தில் யாரிடமாவது உதவி கேட்கலாம் என நினைத்து, வெளியே வந்திருக்கிறார். அந்த சமயத்தில், வீட்டுவாசல் வழியாக வின்சென்ட்ராஜ் நடந்து வந்துள்ளார். இதனைப் பார்த்த அந்தப் பெண், அண்ணே... ஒரு சின்ன உதவிணே.. என்றிருக்கிறார். உடனே என்னாச்சிமா எனக் கேட்டு, அருகே வந்துள்ளார் அமமுக பிரமுகர் வின்சென்ட்ராஜ்.
அதன் பிறகு தனது வீட்டில் லைட் எரியவில்லை என அவரிடம் கூற, உடனே நான் பாக்குறேன் வாம்மா... எனக் கூறிக்கொண்டே அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் வின்சென்ட்ராஜ். உள்ளே சென்றவர், எந்த லைட்டுமா... என ஆர்வமாக கேட்க, அதற்கு எரியாமல் சிக்கல் செய்த லைட்டை காட்டி அதுதாணே என்றிருக்கிறார். உடனே வீட்டில் யாரும் இல்லையா எனக் கேட்ட அவரின் பார்வைகள், சட்டென்று மாறுவதை அந்தப் பெண் அறிந்து வீட்டை விட்டு வெளியே வருவதற்கு முயன்றுள்ளார்.
ஆனால், அதற்குள் அவரைப் பிடித்து உள்ளே இழுத்து.. தவறான முறையில் நடந்துகொண்டுள்ளார் வின்சென்ட்ராஜ். இதனை கொஞ்சமும் அவரிடம் இருந்து எதிர்பார்க்காத அந்தப் பெண், பயந்து போய் வேகமாக கூச்சலிட்டிருக்கிறார். வேறு யாராவது வந்துவிட்டால் மாட்டிக்கொள்வோம் என நினைத்த வின்சென்ட் ராஜ் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், அழுதுகொண்டே தனது கணவருக்கு ஃபோன் செய்துள்ளார். ஆனால் அவரின் கணவர் பிசியாக வேலை செய்து கொண்டிருந்ததால் ஃபோனை எடுக்கவில்லை. அந்தச் சமயத்தில் தனது தோழி ஒருவருக்கு ஃபோன் செய்து பதற்றத்தோடு நடந்த அனைத்தையும் கூறியிருக்கிறார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட அந்தப் பெண், ஆத்திரமடைந்து வின்சென்ட்ராஜிக்கு ஃபோன் செய்து... ஏன் இப்படி பண்ணுன... இதெல்லாம் தப்பு இல்லையா?... அவ வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா என்னாகும் என திட்டியுள்ளார். நடந்த எதையும் அந்தப் பெண் வெளியே சொல்லமாட்டார் என நினைத்திருந்த வின்சென்ட்ராஜ், பிரச்சினை பெரிதாக வெடிப்பதற்குள் அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டு தடுத்துவிட வேண்டுமென நினைத்து உடனே அந்தப் பெண்ணுக்கு ஃபோன் செய்துள்ளார்.
அப்போது, நான் உங்கள அண்ணன மாதிரி நெனச்சித்தான்... உள்ளே கூப்பிட்டேன்... நீங்க என்னன்னா... இப்படி பண்றிங்க? இதே உங்க மனைவி, அக்கா, தங்கைங்க கிட்ட யாராவது இப்படி நடந்துக்கிட்டா சும்மா இருப்பீங்களா? எனக் காட்டமாக கேட்டுள்ளார். அதற்கு பதில் சொல்ல முடியாம திணறியவர், சாரிமா என்னை மன்னிச்சிடு என கெஞ்சியுள்ளார். இந்த ஃபோன் உரையாடலை சாதுரியமாக ரெக்கார்ட் செய்திருக்கிறார் அந்த பெண். மேலும், தொடர்ந்து பேசப் பிடிக்காமல் ஃபோனையும் துண்டித்துள்ளார்.
ஆனாலும், அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்த அந்தப் பெண், தனது கணவர் வந்தவுடன் நடந்த அத்தனையும் ஒண்ணுவிடாமல் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தார், இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று உடனே புகார் கொடுத்துள்ளனர். பின்னர், உதவி ஆய்வாளர் முகம்மது சபீக், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியிருக்கிறார். அதனையடுத்து, வின்சென்ட் ராஜை, கடந்த ஜூன் 23 ஆம் தேதி கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். இளம்பெண்ணின் வீட்டிற்குள், நுழைந்து அமமுக நிர்வாகி ஒருவர், பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.