Skip to main content

அம்மா மினி கிளினிக்குகளில் மருந்தாளுநர்களை நியமிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

amma mini clinics chennai high court tn govt


அம்மா மினி கிளினிக்குகளில் மருந்தாளுனர்களை நியமிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு விரைந்து மருத்துவ சேவை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, தற்போது அம்மா கிளினிக்குகள் பகுதி வாரியாகத் தொடங்கப்பட்டு வருகின்றன. 

 

இந்நிலையில், மருந்தாளுநர்களை நியமிக்காமல், அம்மா மினி கிளினிக்குகளைத் திறக்க தடை விதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வசந்த் குமார், கார்த்திக் ஆகிய இரு மருந்தாளுனர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

அந்த மனுவில், ‘1948 ஃபார்மஸி சட்டப்படி மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில், மருந்தாளுனர்கள் மட்டுமே மருந்துகளை விநியோகிக்கத் தகுதி பெற்றவர்களாவர். ஆனால், தமிழக அரசு அமைத்துள்ள மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மருந்தாளுனர்களுக்கான படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், செவிலியரை வைத்து மருந்து விநியோகிப்பது சட்டப்படி தவறு என்பதால், 2,000 மினி கிளினிக்குகளிலும் மருந்தாளுனர் பணியிடத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும்’எனக் கோரியுள்ளனர். 

 

இந்த வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘ஃபார்மஸி சட்டப்படி மருத்துவர்களோ, மருந்தாளுனர்களோ மருந்து வழங்க விதி உள்ளது. மினி கிளினிக்குகளில் மருத்துவர்களே நேரடியாக மருந்து வழங்குவார்கள். இடத்தின் பரப்பளவு குறைவு என்பதால், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதன் காரணமாக பணியிடங்களை அதிகரிக்க முடியாது'  எனத் தெரிவித்தார்.

 

இதையடுத்து, அரசுத் தரப்பு வாதத்தைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

சார்ந்த செய்திகள்