டார்ஜிலிங்கில் படப்படிப்பை முடித்து, சென்னை திரும்பிய ரஜினிகாந்த் மீண்டும், தனது ஆன்மீக அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற தமிழகத்தில் வியூகம் வகுப்பதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகை தந்தார். அப்போது கட்சி நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்த ரகசிய ஆலோசனையையும் மேற்கொண்டார்.
இதையடுத்து, இரவு நடந்த பாஜக உயர்மட்டக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, இந்தியாவில் தமிழகத்தில் ஊழல் அதிகம் உள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மற்ற கட்சிகளை விட பாஜக நிறைய செய்துள்ளது. தமிழகத்தில் பாஜக பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ஊழல் இல்லாத கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி வைப்போம். செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பேசவுள்ளோம் என அவர் கூறினார்.
அமித்ஷாவின் பேச்சு முழுவதும், ’இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக ஊழல் நடைபெறுகிறது, அதனால் ஊழல் இல்லாத கட்சியுடன் தான் கூட்டணி’என ஊழல் குறித்தே இருந்தது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்து வரும் அதிமுக ஆட்சியின் மீதும் பாஜகவுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளது.
மேலும், மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக இருப்பதாக கூறப்பட்டாலும் கூட, நடந்து வரும் ஆட்சியை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு சில வார்த்தைகள் கூட அவர் பேசவில்லை என்பதே உண்மை.
மாறாக தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சியை கடுமையாக சாடும் விதமாகவே அமித்ஷாவின் பேச்சு இருந்தது என பரவலாக பேசப்படுகிறது. இதன் மூலம் அவர் அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க துளியும் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனாலும், தமிழகத்தில் பாஜக பெரும் வெற்றி பெறும், தமிழக கட்சிகளுடன் கூட்டணி என்பதை அழுத்தமாக கூறுவதன் மூலம் அவர்கள் ரஜினியின் அரசியல் வருகையை தான் முழுவதும் நம்புவதாக தெரிகிறது. மேலும் இவர்களின் கொள்கைக்கு இணங்க ரஜினியும் ஆன்மீக அரசியலே தனது நிலைப்பாடு என்பதை தெளிவாக கூறிவிட்டார்.
இதனிடையே, ஒரு மாதத்திற்கு முன், புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக, டார்ஜிலிங் சென்ற ரஜினிகாந்த் படப்படிப்பை முடித்து, தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இதைதொடர்ந்து, அவர் தனது அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
ரஜினி மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை, 40 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும், 70 சதவீத அளவுக்கு, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். 'டிவி' விவாதங்களில், யார் யார் பேச வேண்டும் என்பதற்காக, ஊடகவியல் தொடர்பாளர்கள் என்ற பொறுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான நிர்வாகிகளை, விரைவில், ரஜினி அறிவிக்க உள்ளார். இதற்காக மாவட்ட வாரியாக மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக, மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்து கிளம்புவதற்கு முன்பு பேலூரிலுள்ள ராமகிருஷ்ணர் மடத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, அந்த மடத்தின் தலைவர் ஸ்மரனாநந்தா மகராஜை சந்தித்து ஆசி பெற்று சென்னை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.