இந்தியளவில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 23ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு என ஊடகங்கள் வெளியிட்டுள்ள முடிவுபடி இன்று பாஜக அதன் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து டெல்லியில் விருந்து வைபவம் செய்தது. இதில் தமிழகத்திலிருந்து அதிமுகவின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இந்திய அரசியலில் வட நாட்டு தலைவர்களின் வருகை ஒருபுறம் இருக்க, தென் நாட்டு தலைவர்களின் வருகை என்றால் அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகிய இருவர் மட்டுமே என இருந்தது. இன்று பாஜக மத்திய அமைச்சர்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு தனது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் விருந்தில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரிடம், “எப்படி இருக்கிறீர்கள் என கேட்டதோடு, ரிஸல்டுக்கு பிறகு கவலைப்படாதீர்கள் பார்த்துக்கலாம்” என இந்தியில் கூறியிருக்கிறார்கள். அதற்கு ஓ.பன்னீர் செல்வம், “மோடி ஜீ எங்களை இன்னும் இரண்டு வருடம் கொண்டு செல்ல வேண்டும்” என கூற மோடி ஓபிஎஸ் தலையில் தட்டி வாழ்த்து கூறியிருக்கிறார். அதன் பிறகு கூட்டணி கட்சி தலைவர்களின் விருந்து வைபவம் நடந்தது.
இந்த நிலையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக எம் எல் ஏ நம்மிடம் பேசும்போது “சார், இன்று நடந்தது பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்களின் விருந்துதான். ஆனால், எங்களுக்கு இது லாஸ்ட் டின்னர் காரணம் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி வெற்றிபெற கூடிய சூழல் இல்லை இதை தெரிந்துதான் மோடியும் அமித்ஷாவும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸை அழைத்து விருந்து கொடுத்துள்ளார்கள். இந்த விருந்துடன் டெல்லி போக்குவரத்து ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் முடிந்துவிட்டது என கலகலவென சிரித்தார்.
இந்த எம்எல்ஏ கூறுவது போல அதிமுக பாஜக கூட்டணி என்பது இந்த தேர்தலின் முடிவுகளை பொறுத்தே இருக்கிறது.