திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான எருது விடும் விழா பல்வேறு பகுதியில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவிற்கு தடையில்லா சான்றிதழ் தீயணைப்புத் துறையினர் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.
இந்நிலையில் ஆம்பூர் அடுத்து புது கோவிந்தபுரம் பகுதியில் எருது விடும் விழா நடத்த தடையில்லாச் சான்றிதழ் கேட்டு, விழாக் குழுவினர் தீயணைப்புத் துறையினரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதனைப் பெற்றுக் கொண்ட தீயணைப்புத் துறையினர் 3000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதாக அலுவலர் தெரிவித்துள்ளார். திருவிழா முடிந்தவுடன் அதற்கான பணத்தை கொடுப்பதாக விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர் அதற்கு மறுப்பு தெரிவித்த தீயணைப்புத்துறை அலுவலர் மேகநாதன் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளார்.
ஆம்பூர் தீயணைப்புத்துறை அலுவலர் மேகநாதன் ரூபாய் 3 ஆயிரம் ரூபாயை கொடுத்தால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், அவர் லஞ்சம் கேட்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எருது விடும் விழா நடத்துவதற்கு அரசு அலுவலர்கள் மட்டும் சுமார் 50,000 முதல் 1 லட்சம் வரை லஞ்சமாக கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.