வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்து அபிகிரிபட்டறை என்கிற கிராமம் உள்ளது. இது மலை மற்றும் காப்புக்காட்டை ஒட்டிய பகுதியாகும். காட்டை ஒட்டிய பகுதியில் பலராமன் என்பவரின் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வீடுக்கட்டி குடும்பத்தோடு வசித்து வருகிறார் பலராமன். அதோடு கல்நடைகளான ஆடு, மாடு போன்றவற்றை அடைத்துவைக்க கொட்டகை இந்த நிலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. அவர் வளர்க்கும் மாடுகள், ஆடுகள், கன்றுக்குட்டிகளை இரவில் கட்டி வைப்பது வழக்கம்.
அதன்படி டிசம்பர் 25ந்தேதி மாலை ஆடு, மாடுகளுக்கு உணவுப்போட்டுவிட்டு கொட்டகையில் அடைத்து வைத்துள்ளனர். நேற்று டிசம்பர் 26ந்தேதி விடியற்காலையில் எழுந்து பார்த்தபோது மரத்தின் ஓரம் ஒரு கன்றுக்குட்டி ரத்தவெள்ளத்தில் இருந்துள்ளது. அதிர்ச்சியான பலராமனும், அவரது குடும்பத்தாரும் பார்த்தபோது இரவு ஏதோ ஒரு மிருகம் வந்து கடித்துவிட்டு சென்றதை உறுதிப்படுத்தினர்.
அக்கம் பக்க நிலத்துக்காரர்கள், இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்தது என உறுதி செய்தனர். இதுப்பற்றி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கூறினர். அவர்கள் வந்து பார்த்துவிட்டு சிறுத்தையின் கால்தடம் உள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர். அதனை தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவயிடத்துக்கு சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
யானைகள் வழித்தடத்தை அழித்து பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் சென்னை டூ பெங்களுரூ இடையே தங்கநாற்கர சாலை அமைக்கப்பட்டது. இதனால் யானைகள் இடமாற்றம் நடைபெறாமல் உள்ளதால் அவைகள் உணவுக்காக ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், பரதராமி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளன. இதுப்பற்றி விவசாய சங்கங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வரும் நிலையில் தற்போது சிறுத்தையின் நடமாட்டம் தொடங்கியிருப்பது விவசாயிகளையும், அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன என்கின்றனர். கால்நடைகளை தாக்க துவங்கியுள்ள மிருகங்களை மனிதனை தாக்க தொடங்கும் முன் விரட்டுவார்களான்னு தெரியல என பயத்தில் கருத்து தெரிவித்தார்கள் மக்கள்.
இந்நிலையில் அம்மக்கள் பயந்ததுபோல் நடக்க துவங்கிவிட்டன. டிசம்பர் 26ந்தேதி இரவு வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பத்தில் சிறுத்தை தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அலமேலு, பாரதி என்கிற இரண்டு பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அவரைப்பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மக்களை தாக்கிய சிறுத்தை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியுள்ளதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். அதனை விரைந்து பிடிக்க வேண்டும் என்கின்றனர் மக்கள். வனத்துறை நடவடிக்கை எடுக்குமா ?