Skip to main content

108 ஆம்புலன்ஸை முடக்கிய நான்கு இம்சை அரசர்களுக்கு காப்பு!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

ambulance incident in thenkasi

 

தென்காசி மாவட்டத்தின் தொழில் நகரமான சங்கரன்கோவிலில் குடிமகன்களான இம்சை அரசர்களின் அட்டகாசம் எல்லை தாண்டியிருக்கிறது.

அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் நேற்றைய தினம் கடையநல்லூர் சமீபம் நடந்த விபத்தில், காயமடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்ஸை முத்துராஜ் ஓட்டி வந்திருக்கிறார். அவருடன் செவிலியர் கார்த்திகேயன் பணியிலிருந்திருக்கிறார்.

ரயில்வே பீடர் ரோட்டின் தனியார் திருமணமண்டபம் அருகே ஆம்புலன்ஸ் இரவு 7 மணியளவில் வரும்போது, தள்ளாட்டத்தில் சலம்பிக் கொண்டு வந்த குடியன்பர்கள் சிலர், ஆம்புலன்சை வழிமறித்து டிரைவர், செவிலியர் இருவரையும் மிரட்டித் தகராறில் ஈடுபட்டவர்கள், பின்பு டிரைவரைத் தாக்கிவிட்டு நடுரோட்டில் நின்றிருந்த ஆம்புலன்சின் சாவியை எடுத்துக் கொண்டு பறந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் நடுரோட்டில் நின்றதால் இரவு அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் ஆம்புலன்சைத் தள்ளிக்கொண்டு போய் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தடைப்பட்ட போக்குவரத்தைக் க்ளியர் செய்தனர். காயமடைந்த டிரைவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆம்புலன்ஸின் சாவியில்லாததால், ஆம்புலன்ஸ்க்கு வந்த அவசர அழைப்பிற்கும் வாகனம் செல்ல முடியாத நிலை.

அதையடுத்து, போலீசார் மேற்கொண்ட முயற்சியால் நெல்லையிலிருந்து கொண்டு வரப்பட்ட மாற்றுச் சாவியின் மூலம் இரவு 11 மணிக்கு மேல் ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. நகரில் நடந்த இந்தச் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியதால், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்ட போலீசார், சங்கரன்கோவிலைச் சேர்ந்த கண்ணன், முத்துப்பாண்டி, முனியராஜ் உள்ளிட்ட 7 பேர்களை அடையாளம் கண்டவர்கள் மேற்கண்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.

 

Ad


கேட்பதற்கு நாதியற்றுப் போய் வரைமுறையில்லாமல் திறந்த வெளிகளை பார் போல மாற்றி, குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து, மக்களின் நடமாட்டத்திற்கு ஊறு விளைவித்து, எல்லைமீறும் இந்த இம்சை அரசர்களுக்கு காப்புக் காட்டியிருக்கிறது காவல் துறை என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்