இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி (31.10.2024) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதி அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் சரவெடி உள்ளிட்ட பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும். குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் டாஸ்மார்க் ஊழியர்களுக்குத் தீபாவளிக்கான போனஸ் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) அன்று செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “ தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி (31.10.2024) கொண்டாடப்படுவதாலும், அன்றைய தினம் மாத இறுதி நாளாக இருப்பதாலும் அரிசி மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) அன்று செயல்படும். எனவே குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய பொது விநியோகத் திட்டப் பொருட்களை 27.10.2024 (ஞாயிறு) அன்றும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இந்த விடுமுறை நாளில் பணியாற்றுவதற்கு ஈடாக நவம்பர் 16ஆம் தேதி (16.11.2024) சனிக்கிழமை அன்று பொது விநியோகத் திட்டக் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.