தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 28ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும். மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமாக இருக்கக்கூடிய கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை இந்த மாவட்டங்கள் அனைத்தும் வகை-1 என குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 27 மாவட்டங்களில் நான்கு மாவட்டங்களை பிரித்து வகை-3 என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவை வகை-3 ல் வருகிறது. மீதமுள்ள 23 மாவட்டங்கள் வகை-2 ல் உள்ளது. மூன்றாவது வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நான்கு மாவட்டங்களுக்கு கூடுதல் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்படலாம். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். வணிக சேவை நிறுவனங்கள் செயல்பட அனுமதி. சார்பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக செயல்பட அனுமதி. அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சலூன் கடைகள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதிக்கப்பட வேண்டும். திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 100 நபர்கள் பணி புரியும் வகையில் அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் பொது போக்குவரத்து 50 சதவீத இருக்கைகளுடன் அமர்ந்து மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் அந்த 4 மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு)
கொடைக்கானல், ஏற்காடு, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும். மீதமுள்ள மாவட்டங்களில் வகை-1 உள்ள 11 மாவட்டங்களுக்கு எந்தவித கூடுதல் தளர்வுகளும் வழங்கப்படவில்லை. வகை-2 ல் உள்ள 23 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.