நூற்றாண்டு கால தமிழர்களின் தியாக வரலாற்றின் அடையாள சின்னமான மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றுவதை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டு இருந்தார்.
அதன்படி, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அனைத்து கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வைகோ தலைமை தாங்கினார். இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. சார்பில் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமீது, இயக்குனர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய வைகோ, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் விடியலுக்காகவும், செந்தமிழ் மொழியின் தனித்தன்மையை, உரிமையை பாதுகாக்கவும், சமூக நீதியை காக்கவும், சமதர்ம சமுதாயம் காணவும் போராடிய மாவீரர்களின் உடல்கள் இந்த மூலக்கொத்தளம் மயானத்தில்தான் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்துள்ளன.
அதை தற்போது தமிழக அரசு அகற்ற துடிக்கிறது. முதல்-அமைச்சரை எச்சரிக்கிறோம். மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றி பெரும் ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள். இந்த அரசு நெருப்பில் கை வைக்கிறது. முதற்கட்டமாக இந்த ஆர்ப்பாட்டம் மூலம் நாங்கள் எதிர்க்கிறோம். எங்களை போலீஸ் படையை கொண்டு அடக்க முயற்சித்துவிடாதீர்கள். அப்படி முயற்சித்தால், கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றும் போது நடந்தது தான் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.