ஜனவரி 8- ஆம் தேதி ஒரு நாள் நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில தலைவரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் மக்களவை உறுப்பினருமான கே. சுப்பராயன் அறிவித்துள்ளார்.
ஈரோட்டில் எம்.பி. கே.சுப்பராயன் பேசுகையில், "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை காத்தல், ரயில்வே, சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதை நிறுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும், ஜனவரி 8- ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் செய்கிறோம்.
இந்த போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கிறது. நாடு முழுவதும் 20 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கடந்த நூறு ஆண்டுகளாக தொழிலாளர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட 44 சட்டங்களை, மத்திய பா.ஜ.க. மோடி அரசு வெறும் நான்கு சட்டங்களாக மாற்றி, அவையெல்லாம் நீர்த்துப்போனதாக அமைத்து விட்டனர்.
முன்பு கொண்டு வரப்பட்ட 44 சட்டத்தையும் ஆளும் அரசுகளே கொண்டு வந்ததில்லை. தொழிலாளர்களின் போராட்டம் மூலம் கிடைத்த சட்டங்கள் தான் அவையெல்லாம். அவற்றை நான்காக குறைத்ததால், போராடி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோகிறது. இந்த நடவடிக்கை தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக மாறுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனமும் இனி எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம். அதில் பணிபுரியும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கலாம். இதனால் பல்வேறு விளைவுகள் ஏற்படும்.
ஆகவே தொழிலாளர்கள் தியாகம் செய்து பெற்ற சட்டங்களை குறைக்கக் கூடாது என்பதற்காகவும், அடுத்து இப்போது மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால், இந்திய நாடு துண்டாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையும் ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத, மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற சட்டங்களை அழிக்கக்கூடாது என்பதற்காக தான் நாங்கள் ஜனவரி 8- ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளோம்.
இதற்காக, வீதிகளில் பிரச்சார இயக்கம் நடத்துவது, தொழிலாளர்களை சந்தித்து பேசுவது, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் பங்கேற்க செய்ய உள்ளோம். அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த 'பாரத் பந்த்' திற்கு மத்திய பா.ஜ.க, மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. பினாமி அரசான அ.தி.மு.க.வை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுக்கிறது. மோடி அரசின் செயல்பாட்டை நாடு முழுவதும் ஒரு நாள் ஸ்தம்பிக்க வைப்போம்". இவ்வாறு சுப்பராயன் எம்.பி கூறினார்.