திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்கரைபட்டி ஊராட்சி, மேல்கரைபட்டி நால்ரோடு, ராஜாம்பட்டி ஊராட்சி, புஸ்பத்தூர் ஊராட்சியில் வி.வி.நகர் மற்றும் கண்டியகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் புதிய பகுதி நேர நியாயவிலைக்கடைகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
அதன்பின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். 5 பவுனுக்குக் குறைவான நகைக்கடன்கள், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழு பெற்ற கடன்கள், விவசாயிகளின் ரூ.12,000 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்தார். தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதைத் தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராகத் திகழ்கிறார். தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு, தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டிற்குத் தபாலில் குடும்ப அட்டை வந்து சேரும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் தமிழகத்தில் இதுவரை சுமார் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை எதிர்பாராதவிதமாகத் தொலைந்து போனால், புதிய குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டிற்குத் தபாலில் குடும்ப அட்டை வந்து சேரும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், நியாயவிலைக்கடைகளில் கைரேகைப் பதிவு மூலம் பொருட்கள் வாங்கும்போது சில சிரமங்கள் ஏற்படுகின்றன. அவற்றைத் தவிர்க்கும் வகையில் விரைவில் கண் கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் என நியாயவிலை கடைக்குச் செல்ல முடியாதவர்கள், பொருட்கள் வாங்க வேறு ஒரு நபரை நியமித்து விண்ணப்பம் அளித்தால், அந்த நபரிடம் பொருட்கள் வழங்கப்படும். அந்த வகையில் தமிழகத்தில் சுமார் 4 இலட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். பொதுமக்கள் குடிமைப்பொருட்களைப் பெறுவதற்காக நீண்ட தூரம் சென்று சிரமப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவர்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே குடிமைப்பொருட்களைப் பெற்றுப் பயன்பெறும் வகையில், புதியதாக நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 1,500 கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 1,157 நியாயவிலைக்கடைகள் மற்றும் 6,87,171 குடும்ப அட்டைகள் உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு, புதிதாகப் பகுதி நேரம் மற்றும் முழு நேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது தனியார் வாடகைக் கட்டடங்களில் செயல்படும் இந்தப் புதிய நியாயவிலைக் கடைகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்ட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி, பருப்பு, எண்ணைய், சர்க்கரை போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் மாதந்தோறும் 2.24 கோடி நபர்களுக்கு 3.40 மெ.டன் தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக கலர்டாப்ளர் இயந்திரம் பொருத்தப்பட்ட அரிசி ஆலைகளில் மட்டுமே நெல் அரவை செய்யப்பட்டு, அரிசி கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18.50 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர். இத்திட்டத்தில், காலைச் சிற்றுண்டியில் வழங்க வேண்டிய உணவு வகைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பட்டியலிட்டு, அதன்படி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் ஆட்சியில் மகளிருக்கு சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, உள்ளாட்சி அமைப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டன. அந்த வகையில், முதலமைச்சர் தற்போது மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். தகுதியான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தகுதியான அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும். ஒட்டன்சத்திரம், பழனி சட்டமன்றத் தொகுதிக்கு காவிரி நீர் ஆதாரத்தைக் கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.930 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வரும் 30 ஆண்டு காலங்களுக்கு இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அந்தவகையில் திட்டமிடப்பட்டுள்ளது
பழனி அரசு மருத்துவமனையானது மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டு, ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மேல்கரைப்பட்டி ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் சாலை வசதி, குடிநீர் வசதி என ரூ.8 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேல்கரைப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் 5 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்ட ரூ.1.30 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கல்வி, பேருந்து வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றைச் செயல்படுத்தி வருகிறார்” என்று கூறினார்.