தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாகக் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது.
நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் 'மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடந்த 24.05.2024 அன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (25.05.2024) காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்' என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, குமரி, தென்காசியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. வட சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம், கொருக்குப்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் தற்போது மழை பொழிந்து வருகிறது.