கரோனா தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 213 டாஸ்மாக் கடைகளும், 128 பார்களும் செயல்பட்டுவந்தன. சாதாரண நாட்களில் 3 முதல் 4 கோடி ரூபாய்வரை வியாபாரம் நடைபெறும். பண்டிகை, விசேஷ நாட்களில் 10 கோடி ரூபாய்வரை வியாபாரம் நடைபெறும். இந்த நிலையில், கரோனா வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கியதால் முதலில் பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் மீண்டும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்படத் தொடங்கின.
ஆனால், ஈரோடு, கோவை உட்பட 11 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்ததன் காரணமாக டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்தன. இதனால் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மது குடிப்போர், அருகே உள்ள திண்டுக்கல், திருச்சி, தருமபுரி மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கி வந்தனர். தற்போது ஈரோடு உட்பட 11 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியதால் அரசுத் தரப்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஈரோடு உட்பட 11 மாவட்டங்களில் 5ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. கிட்டதட்ட 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று (05.07.2021) காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதலே டாஸ்மாக் கடையில் மது குடிப்போர் வரிசையில் நின்று மது வாங்க காத்து நின்றனர். மாவட்டம் முழுவதும் 213 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மது வாங்க வந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டன. மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டது.
சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தன. கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன. ஈரோடு ராஜாஜிபுரத்தில் உள்ள மதுக்கடைகளில் மது வாங்க வந்தவர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மது பாட்டிலை வாங்கிக் கடையின் முன் வைத்து சூடம் ஏற்றி வழிபட்டார். ‘மது எங்கள் குலதெய்வம் போன்றது. அதனால்தான் சூடம் ஏற்றி வழிபட்டேன். இந்த ஆல்ஹாகால் உள்ளவரை இனிமேல் கரோனா நோய் எப்போதும் வராது...’ என வேடிக்கையாக கூறினார். மதுபான பார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள 128 பார்களும் மூடப்பட்டிருந்தன.