
நாமக்கல் அருகே, பேய் ஓட்டுவதாகக் கூறி இரண்டு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மந்திரவாதியைக் காவல்துறையினர் 'போக்சோ' சட்டத்தில் கைதுசெய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பரவக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளிக்கு 9 மற்றும் 15 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். கரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால், சிறுமிகள் வீட்டில் இருந்து வருகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வீட்டில் முடங்கி இருந்ததால் சிறுமிகளுக்கு லேசாக மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளூரைச் சேர்ந்த சிலரின் ஆலோசனையின் பேரில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரத்தில் உள்ள மந்திரவாதி சேகர் (50) என்பவரிடம் தாயத்துக் கட்டி வருவதற்காக பெற்றோர் சிறுமிகளை அழைத்துச் சென்றனர்.
அப்போது சிறுமிகளுக்குப் பேய் பிடித்துள்ளதாகக் கூறிய மந்திரவாதி, சில நாள்கள் அவர்களை அங்கேயே தங்கவைத்து பேயோட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய சிறுமிகளின் பெற்றோர், மகள்களை அவரிடம் விட்டுவிட்டு வீடு திரும்பிவிட்டனர். அந்த மந்திரவாதியோ பேய் ஓட்டுவதாகக் கூறிவிட்டு, சிறுமிகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள், சில நாள்கள் கழித்துத் தங்களை அழைத்துச் செல்வதற்காக வந்த பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து மங்களபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல்துறையினர் மந்திரவாதி சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் நவ. 18ஆம் தேதி கைது செய்தனர். அவர் வேறு யார் யாரிடம் இதுபோல பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.