விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீசார் அரகண்டநல்லூர் தபோவனம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஈச்சர் லாரி ஒன்று அவ்வழியாக வந்துள்ளது. அதையும் மறித்து சோதனை செய்தனர்.
லாரியில், பெங்களூருவில் இருந்து காய்கறி மூட்டைகளை விற்பனை செய்வதற்காக ஏற்றிவருவதாக அந்த வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். இருந்தும் போலீசார் அதன் உள்ளே பிரித்து சோதனை செய்ததில் காய்கறி மூட்டைகளுக்கு மத்தியில் 81 அட்டை பெட்டிகளில் 3,000க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் இரண்டேமுக்கால் லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த ஈச்சர் லாரியை ஓட்டிவந்த டிரைவர் மற்றும் உதவியாளரிடம் போலீசார் விசாரணை செய்ததில், திருக்கோவிலூர் அருகே உள்ள தனியாலம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது மகன் ரவி வயது 25 என்பதும், இவர் தமக்கு சொந்தமான லாரியில் பெங்களூரு சென்று காய்கறிகளை விற்பனை செய்துவருவதாக கூறி அங்கிருந்து மது பாட்டில்களைக் கடத்திவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கு உதவியாளராக கிளியூரைச் சேர்ந்த முருகன் மகன் அய்யனார் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரவி, அய்யனார் இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்கள் ஏற்றிவந்த மது பாட்டில்களையும் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்கள் கடத்தியவர்களை உடனடியாகச் சென்று வாகன சோதனையின் மூலம் கைதுசெய்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பெங்களூருவில் இருந்து காய்கறி லாரியில் 120 மது பாட்டில்கள், 500 லிட்டர் சாராயம் ஆகியவற்றைக் கடத்தி வந்ததை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் பெரியவலை கூட்டு ரோட்டில் வாகன சோதனையின்போது மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தனர். மது பாட்டில் சாராயம் லாரியில் கொண்டு வந்த, துலங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், சிவராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அதேபோன்று விழுப்புரம் மாவட்டம் வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி நேற்று முன்தினம் (30.05.2021) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிவந்த லாரி ஒன்றைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 93 மதுபாட்டில் இருந்ததைப் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த மதுபாட்டில்கள் கடத்திவந்த லாரி டிரைவர் திருவெண்ணநல்லூர் அருகிலுள்ள அன்றாய நல்லூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கடத்தல் சரக்குகள் தமிழகத்தில் மிக வேகமாக ஊடுருவிவருகின்றன.