இன்று (ஏப்.24) 'பஞ்சாயத்துராஜ் தினம்' கடைப்பிடிக்கப்படுவதையொட்டி 'நீடித்த வளர்ச்சி இலக்குகள்' குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காட்டில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்று ஊராட்சிகளின் செயல்பாடு, வளர்ச்சிப்பணிகள், ஊரகப் பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பெண்கள், குடிநீர் பிரச்சனை, ரேஷன் கடை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து தமிழக முதல்வரிடம் தங்களது குறைகளைக் கோரிக்கைகளாக வைத்த நிலையில், அவை சரி செய்யப்படும் என முதல்வர் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ''உங்களோடு இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய செங்காடு கிராம ஊராட்சியினுடைய மக்களை சந்திக்க கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். தமிழக உள்ளாட்சி அமைப்புகள் பாரம்பரியமான பழம்பெருமை வரலாறு கொண்டது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கல்வெட்டு குறிப்புகள் இதற்குச் சான்றாக இருக்கிறது. அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம். இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பது எனக்கு மிகவும் பெருமை. நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு முறையாக உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தி முடித்திருக்கிறோம். உள்ளாட்சி பிரதிநிதிகள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். உள்ளாட்சியில் ஏதோ நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஆளுங்கட்சி தான் வந்திருக்கிறது என்று அல்ல, 95 சதவீதம் நாம் வந்திருந்தாலும் மீதமுள்ள சதவீதம் எதிர்க்கட்சியினரும் வந்திருக்கிறார்கள். எனவே அவர்களை எதிர்க்கட்சி, இன்னொரு கட்சி என்று பார்க்காமல் எல்லா ஊராட்சிகளுக்கும் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அந்த ஊராட்சிகளுக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ, என்னென்ன தேவைகள் அவசியமோ அதனை நிறைவேற்றி வருகிறோம். குடிநீர் பிரச்சனை பற்றி சொன்னீர்கள், ரேஷன் கடையை பற்றி சொன்னீர்கள், அதேபோல் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சந்திக்கும் இடையூறுகள் பற்றி சொன்னீர்கள், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இப்படி பல கோரிக்கைகள் இருக்கிறது. இதை எல்லாம் நாங்கள் இன்றைக்கு கவனமாகக் குறித்து வைத்துக் கொண்டு நிச்சயமாக, உறுதியாக அதை எல்லாம் மிக மிக விரைவில் அத்தனையும் நிறைவேற்றித் தருவதற்குக் காத்திருக்கிறோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் வழங்குகிறேன்'' என்றார்.