Skip to main content

அ.தி.மு.க ஆட்சியை காப்பாற்றும் போட்டியில் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது: ஜி.கே.மணி பேட்டி

Published on 11/09/2017 | Edited on 11/09/2017
அ.தி.மு.க ஆட்சியை காப்பாற்றும் போட்டியில் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது: ஜி.கே.மணி பேட்டி

பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

செப்டம்பர் 17 அன்று விழுப்புரத்தில் பா.ம.க சார்பில் நடைபெறவுள்ள சமூக நீதி மாநாடு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி, மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் பழ.தாமரைக்கண்ணன், அசோக்குமார், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், முத்துக்கிருஷ்ணன், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.



அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் நாட்டை ஆளும் அதிமுக இரண்டு மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். அவர்கள் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக போட்டி போடுகிறார்கள். மக்களை பற்றி நினைத்து பார்ப்பதில்லை. மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் தமிழ்நாடு மிகப் பெரிய மாநிலம், மகாராஷ்ட்ரா மிகப் பெரிய மாநிலம் . இந்த இரண்டு மாநிலத்திற்கும் ஒரே ஆளுநர் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே தமிழ் நாட்டுக் கென நிரந்தர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும்.

பா.ம.க நடத்திய சட்டப் போராட்டத்தின் மூலம், உச்ச நீதி மன்ற தீர்ப்பினடிப்படையில் தமிழ்நாட்டில் 3200 மதுக்கடைகளும், நாடு முழுதும் 9000 மதுக்கடைகளும் மூடப்பட்டன. ஆனால் தற்போது நகரப் பகுதிகளிலுள்ள நெடுஞ்சாலைகள் நகர சாலைகள் எனக் கூறி மீண்டும் 1200 மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிரான மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அம் மாநில அரசுகள் மதுக்கடைகள் திறப்பதை தவிர்க்கின்றன. ஆனால் தமிழ்நாடு அரசு மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி விட்டு மதுக்கடைகள் திறப்பதில் தீவிரம் காட்டுகிறது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வெளி மாநிலத்தவரை பணிக்கு அமர்த்துவதும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தாததும், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்காததும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டங்களை ஒடுக்குவதும், போராடுபவர்களை கைது செய்வதும் தவறு. நீட் தேர்வை எதிர்த்து பா.ம.க தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்

-சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்