
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்துமுடிந்த நிலையில் நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. இந்நிலையில் நேற்று அதிமுக எம்.எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டம் மாலையில் நடைபெற்றது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் தரப்பை எதிர்க்கட்சி தலைவராக ஆக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கழக வாசலிலேயே குரல் எழுப்பினர். கூட்டத்திலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இருதரப்பும் எதிர்க்கட்சி தலைவர் பதவி தனக்கு வேண்டும் என்று விடாப்படியாக இருந்ததால் 4 மணி நேரமாக கூட்டம் நடைபெற்றும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் மீண்டும் எம்எல்ஏக்களின் கூட்டம் வரும் 10 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் கூட்டம் நடைபெறுவதற்கு அதிமுக தரப்பு காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளனர்.