புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று மாநகர மேயராக திலகவதி செந்தில் பதவி ஏற்று முதல் மாநகர கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி ஆகியோர் முதல் மாமன்ற கூட்டத்தில் பங்கேற்றுத் தொடங்கி வைத்தனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை முத்து ராஜா, கந்தர்வக்கோட்டை சின்னத்துரை, வடக்கு மா.செ செல்லப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல் மாநகர மேயருக்கு முத்துப்பட்டினம் மணல் ராமச்சந்திரன் 51 சவரனில் வழங்கிய சங்கிலியையும், புதுக்கோட்டை நகை வியாபாரிகள் வழங்கிய வெள்ளி செங்கோலையும் மேயரிடம் வழங்கி அமைச்சர் நேரு மாநகரத்தில் சில பணிகளையும் தொடங்கி வைத்தார். ஆணையர் நாராயணன் நன்றி கூறினார். முன்னதாக இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது நகரில் திமுக - அதிமுகவினரை இணைத்து புதுக்கோட்டை மாவட்ட ஒலி ஒளி அமைப்பாளர்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு பதாகை பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மாவட்ட ஒலி ஒளி அமைப்பாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் செந்திலின் மனைவி மேயராக பதவி ஏற்கும் திலகவதி செந்திலையும், 16 வது வார்டு மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் சங்க மாவட்டத் தலைவர் சேட் (எ) அப்துல் ரகுமானையும் வாழ்த்துகிறோம் என்று அந்த பதாகை வைக்கப்பட்டுள்ளது. மேயர் திமுக, 16வது வார்டு உறுப்பினர் அதிமுக இருவருக்கும் ஒரே பதாகையா? என்ற கேள்வி எழுந்து அடங்குவதற்குள், 11 ஊராட்சி மக்களின் கோரிக்கைகளை ஏற்காமல் மாநகராட்சியில் சேர்த்ததால் மாமன்ற முதல் கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று சேட் தலைமையில் 8 அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து முதல் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.