சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஓபிஎஸ் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல்நிலையத்தில், மோதலின் பொழுது முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், அச்சுறுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கானது பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த மோதல் காரணமாக இருதரப்பைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
எனினும் அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்ட பின்னரும் விசாரணை துவங்கவில்லை. அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதல் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த தகுந்த உத்தரவுகளை தமிழக டிஜிபி வழங்க வேண்டும். அப்படி டிஜிபி உத்தரவிட தவறினால் வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து கடந்த செப் 7ம் தேதி அதிமுக அலுவலகத்தில் சோதனை நடந்தது. காலை 8 மணி முதல் 20க்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும், பொதுப்பணி துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சேதமான பொருட்கள் குறித்தும் காணாமல் போன பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது காணவில்லை என குறிப்பிடப்பட்ட வெள்ளி வேல் அதிமுக அலுவலகத்தில் இருந்ததால் சிபிசிஐடி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் ஆங்காங்கு சேதம் செய்யப்பட்ட பொருட்களையும் காணாமல் போன ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் தடயவியல் நிபுணர்கள் அளிக்கும் அறிக்கை, சிபிசிஐடி அதிகாரிகள் அளிக்கும் அறிக்கை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளிக்கும் அறிக்கை என மூன்றையும் சேர்த்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியானது.
தற்போது அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டதாக புகார் அளித்த சி.வி.சண்முகத்திடம் மறுவிசாரணை செய்து சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகள் வாக்குமூலமாக பெற்றனர்.