
தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலை அடுத்து திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அதிமுக தன்னை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக்கொண்டது. அதனையடுத்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், இன்று (14.06.2021) மதியம் 12 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பி.எஸ். ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் தவணையாக 40 நிமிடம் எம்.எல்.ஏக்களுடன் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பின் இறுதியாக சட்டமன்ற உறுப்பினர்களைக் காக்க வைத்துவிட்டு 20 நிமிடங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ஓ.பி.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணைக் கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை பொருளாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், தற்போதைய பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. அன்பழகன் சட்டப்பேரவைச் செயலாளராகவும், துணைச் செயலாளராக அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.