கடலூர் வண்டிப்பாளையம், ஆலைக்காலனியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன்(43). அதிமுக மாவட்ட பிரதிநிதி மற்றும் கடலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். இவர் கடந்த 29ஆம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் புஷ்பநாதனை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளைப் பிடிக்க கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில் ஒரு தனிப்படையும், இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் ஒரு தனிப்படையும் அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகள், அப்பகுதி செல்போன் டவர்கள், புஷ்பநாதனின் செல்போன்களை ஆய்வு செய்தனர். தனிப்படை போலீசார் கடலூர், வண்டிபாளையம் ஆலைக்காலனி பகுதியைச் சேர்ந்த தணிகாசலம் மகன் நேதாஜி (24). கடலூர் வசந்தராயன்பாளையம் பாலன் காலனி பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சந்தோஷ்குமார்(23), கடலூர் வண்டிபாளையம் ஆலைக்காலனி பகுதியைச் சேர்ந்த முரளி மகன் அஜிஸ் (23) ஆகிய 3 இளைஞர்களைப் பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் கடந்த ஓராண்டுக்கு முன் 3 பேரும் சேர்ந்து ஆடுகளைத் திருடியுள்ளனர். இதனை அதிமுக பிரமுகர் புஷ்பநாதனிடம் விற்பனை செய்துள்ளனர். திருடப்பட்ட ஆடுகள், கடலூர் தி.மு.க பிரமுகருக்கு சொந்தமானதாகும். இது தொடர்பான புகாரில் ஆடு திருடிய நேதாஜி, அஜய், சந்தோஷ் உள்ளிட்டவர்கள் 3 பேரையும் போலீஸார் பிடித்துள்ளனர். மேலும் ஆடு திருட பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். தங்களை ஜாமீனில் எடுக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை போலீஸாரிடம் இருந்து மீட்டு தரவும் புஷ்பநாதனிடம் உதவி கேட்டுள்ளனர்.
ஆனால் அவர் உதவி செய்யவில்லை. ஜாமீனில் வெளிவந்த இவர்கள் இது குறித்து புஷ்பநாதனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் புஷ்பநாதனுக்கும் அந்த வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் புஷ்பநாதனை கொலை செய்ய திட்டமிட்ட 3 பேரும் கடந்த சில தினங்களாக புஷ்பநாதன் நோட்டமிட்டு கடந்த 29ஆம் தேதி இரவு கொலை செய்தது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இத்தத்கவலறிந்து ஆத்திரமடைந்த புஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளையும் சூறையாடினர். மேலும் ஜூலை 1-ஆம் தேதி புஷ்பநாதனின் இறுதி சடங்கு நடைபெறுவதையொட்டி. அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் கடலூர் பகுதியில் பரபரப்பாக இருந்தது. ஆடு திருடிய சம்பவ வாக்குவதாம் கொலையில் முடிந்துள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் அதிமுக பிரமுகர் கொலை அதிர்ச்சி அளிப்பதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.