Skip to main content

“பாஜகவுடன் கூட்டணி இல்லை” - அதிமுக அதிரடி 

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

AIADMK has no alliance with BJP at present

 

இந்தியாவில் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வரும் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் தமிழகத்தில் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீப காலமாக அதிமுக - தமிழக பாஜக இடையே  வார்த்தை போர் நிலவி வருகிறது. தமிழக தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்களான ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என பலரையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறிப் பேசுவதாகக் குற்றம்சாட்டினர். 

 

இந்த நிலையில் சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்தும் அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி. சண்முகம் போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மாறி மாறி இரு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயகுமார், “அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை; கட்சி முடிவையே நான் சொல்கிறேன். தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பா.ஜ.க.வுக்குத் தான் பாதிப்பு. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நோட்டாவை கூட தாண்ட முடியாது. பா.ஜ.க.வுக்கு காலே இல்லை; எப்படி தமிழ்நாட்டில் காலூன்றும்?

 

எங்களை விமர்சிக்கும் பா.ஜ.க.வை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்? கூட்டணி கட்சியை விமர்சித்தால் தேர்தலில் தொண்டர்கள் எப்படி ஒன்றிணைந்து வேலை செய்வார்கள்? கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை பேசி வருவதை அ.தி.மு.க. தொண்டர்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; சிங்கக் கூட்டத்தை பார்த்து சிறுநரி அண்ணாமலை ஊளையிடுகிறது; அண்ணாமலையைத் திருத்துங்கள் என்று பா.ஜ.க. மேலிடத்தில் கூறிவிட்டோம்; பா.ஜ.க. தேசிய தலைமை சொல்லியே அண்ணாமலை தனது பேச்சை நிறுத்தாவிட்டால், தாறுமாறாக விமர்சனம் செய்வோம்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்