அரசியல் பிரபலம் ஒருவரது உறவினர் அடையாளம் இருந்தாலே போதும், சிலர் தேடிவந்து வலையில் விழுந்து லட்சங்களை இழக்கின்றனர். நிரந்தரமாகத் தனக்கென்று அப்படி ஒரு அடையாளத்தைத் தக்கவைத்திருப்பவரையும், மோசடிக்கு ஆளானவர்களையும் தெரிந்துகொள்வோம்!
குறுக்கு வழியில் பயணித்துப் பலன்பெற வந்தவர்களிடம் லட்சம் லட்சமாக கோடிகளைக் கறந்த நல்லதம்பியும் புலம்பத்தான் செய்கிறார். ‘விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரான என் அண்ணன் கா.ரவிச்சந்திரனும், கொடைக்கானல் மதர் தெரஸா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான என் அண்ணி வள்ளியும், சாகும் தருவாயிலுள்ள என்னை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். மோசடி செய்த இவ்விருவரிடம் உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியாயம் கிடைக்கச் செய்யுங்கள்.’ எனப் புகார் மூலம் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனது அடையாளமாக நல்லதம்பி என்ன சொல்கிறார்?
நான், முன்னாள் சபாநாயாகர் காளிமுத்துவின் கடைசித்தம்பி ஆவேன். வழக்குரைஞராக, விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக, மதுரை உயர் நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞராகப் பணி செய்துள்ளேன். அரசியலில் ஊராட்சி மன்றத் தலைவராக, ஒன்றிய கவுன்சிலராக, மாவட்ட கவுன்சிலராகப் பதவி வகித்துள்ளேன். என் மனைவி மாலதியும் மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். நல்லதம்பி என்ற விஜயநல்லதம்பி, தனது புகாரில் குறிப்பிட்டுள்ள இந்த அடையாளமே, லஞ்சம் கொடுத்து அரசு வேலையைப் பெற்றுவிடத் துடித்தவர்களை ஈர்த்து, லட்சங்களில் பணத்தை இழக்கவைத்துள்ளது.
உடன்பிறந்த அண்ணன் ரவிச்சந்திரன் மற்றும் அண்ணி வள்ளி மீது நல்லதம்பி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை -
2016 முதல் 2019 வரை கொடைக்கானல் - மதர் தெரஸா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வள்ளி இருந்தார். அப்போது, பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் எழுத்தர் பணி பெற்றுத் தருவதாகச் சொல்லி, பலரிடமும் அதற்கான தொகைகளை ஏற்பாடு செய்யும்படி என்னிடம் கூறினார்கள். பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில், TNSET மதர் தெரஸா பல்கலைக்கழகம் மூலம் தேர்ச்சிபெற, போதுமணி, மங்கையர்க்கரசி, அன்புமணி ஆகியோருக்கு துணைவேந்தர் வள்ளி மூலம் நான் உதவினேன். இத்தகைய சேவைக்காக, ரவிச்சந்திரன் மற்றும் வள்ளியிடம் பலர் பணம் கொடுத்தனர். தகுதியில்லாதவர்களை இவர்கள் தேர்ச்சி பெறவைத்த விபரம், மதுரை முனியசாமி போன்றோருக்குத் தெரியும். ஆவின் துறையில் பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தும் அதிகாரம் பெற்றது, மதர் தெரஸா பல்கலைக்கழகம். ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருந்தபோது, அவருடைய உதவியாளர் பாபுராஜ் மகன், ஆவின் மேலாளர் தகுதித் தேர்வில், தகுதியில்லாவிட்டாலும் தேர்ச்சியானது இப்படித்தான்.
கொடைக்கானல் விஜய் மனைவி சத்யா, கணினி உதவிப் பேராசிரியர் பணிக்கு முன்பணமாக ரூ.15 லட்சம் தந்தார். பெற்றுக்கொண்ட வள்ளி, மீதத்தொகை ரூ.10 லட்சத்தை ரெடி பண்ணச் சொல்லிவிட்டு, உதவிப் பேராசிரியர் கணிதம், வேதியியல் மற்றும் எழுத்தர் பணிக்கு வேறு ஆட்கள் இருந்தால் ஏற்பாடு செய்யச் சொன்னார். வேதியியல் உதவிப் பேராசிரியர் பணிக்கு ஸ்ரீஜா என்பவரிடம் ரூ.20 லட்சம், கணித உதவிப் பேராசிரியர் பணிக்கு சத்யா என்பவரிடம் ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.45 லட்சத்தை என் அண்ணன் ரவிச்சந்திரனிடம் கொடுத்தார்கள். எழுத்தர் பணிக்காக ஜெனிபரிடம் ரூ.4 லட்சம், சந்திராவிடம் ரூ.5 லட்சம், கிருஷ்ணம்மாளிடம் ரூ.5 லட்சம், சுகன்யாவிடம் ரூ.5 லட்சம், கீர்த்தனாவிடம் ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.23 லட்சத்தை, நான் சொன்னதன் பேரில் விஜய் கொடுத்தபோது, அண்ணனுடன் அண்ணியும் உடன் இருந்தார். இதுபோக, ரவிச்சந்திரன் சாத்தூர் – மேட்டமலை பூபாலன், சாத்தூர் மணி ஆகியோரிடம் பஞ்சாயத்து கிளார்க் வேலைக்கு ரூ.12 லட்சம் வாங்கினார்.
வாங்கிய பணத்துக்கு எந்த வேலையும் நடக்காத சூழலில், என்னுடைய அண்ணன் ரவிச்சந்திரனை சாத்தூர் சட்டமன்ற வேட்பாளராக, அதிமுக தலைமை அறிவித்தது. என்மூலம் பணம் கொடுத்தவர்கள் எனக்கு நெருக்கடி தந்தார்கள். நான் அண்ணன் ரவிச்சந்திரனிடம், அவரும் அண்ணியும் வாங்கிய பணத்தைத் திருப்பிக்கேட்டபோது, ‘அதிமுக தலைமை தேர்தலுக்குப் பணம் கொடுக்கும். அந்தப் பணத்தில் செட்டில் செய்துவிடுகிறேன்.’ என்றார். அந்த வகையில், அவருக்கு அதிமுக தலைமை கொடுத்த ரூ.10 கோடியே 80 லட்சம் ரூபாயிலிருந்து, ரூ.25 லட்சத்தை ஊட்டியில் வைத்து என்னிடம் திருப்பிக் கொடுத்தார். தருவதாகச் சொன்ன மீதி பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். அண்ணி வள்ளியின் துணைவேந்தர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி அண்ணன் வாங்கிய பணத்தில், அண்ணியின் பெயரிலும், அவருடைய மகள் பெயரிலும் மதுரை, குறிஞ்சி நகரில் பல கோடி மதிப்பிலான வீடு, நத்தம் சாலையில் எலைட் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு, குடிசைமாற்று வாரியத்தில் 2 வீடுகள், சிவகாசி, சித்துராஜபுரம் – வெம்பக்கோட்டை சாலையில் காலியிடம், சிவகாசி ஹவுசிங் போடு எதிரில் மகிழ் கிளினிக் காலியிடம் என வாங்கிக் குவித்திருக்கிறார்கள் எனப் பட்டியலிட்டுள்ளார் நல்லதம்பி.
நாம் விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கா.ரவிச்சந்திரனைத் தொடர்புகொண்டோம்.
நல்லதம்பியைப் பத்தி புதுசா நான் சொல்ல வேண்டியது இல்ல. அவரு புகார் கொடுத்தார்ன்னு போலீஸ் தரப்புல இருந்து கூப்பிட்டாங்கன்னா, நான் போய் விளக்கம் சொல்லிட்டு வரப்போறேன். காளிமுத்தண்ணன் பேரை களங்கப்படுத்திட்டு இருக்கான். எவ்வளவோ அசிங்கப்படுத்திட்டான். என் மனைவி வள்ளி பல்கலைக்கழகத்துல இருந்த காலத்துல, கல்வித்துறையில் ரொம்ப ஹானஸ்ட்டான துணைவேந்தர்ன்னு பேர் வாங்கினவங்க. ஒரு போஸ்டிங் போட்டால்கூட தவறாகிடும்ன்னு எந்த போஸ்டிங்கும் போடல. நல்லதம்பியை கட்சியைவிட்டு நீக்கிட்டோம்கிற காழ்ப்புணர்ச்சில பொய்யான புகார் கொடுத்திருக்காரு. அவரு பண்ணுன தவறுகளுக்கு எல்லாம் வேற யாரையாவது பழி சொல்லணும்னு பார்ப்பாரு. இதுக்கு முன்னால, இப்படித்தான் ராஜேந்திரபாலாஜி மேல பழிபோட்டாரு. இப்ப என்மேல பழிபோடறாரு. ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. நான் 2007-ல இருந்தே நல்லதம்பியோடு தொடர்புல இல்ல. அவருகூட பேச்சு இல்ல. என்னுடைய ஒரே மகள் கல்யாணம் 2012-ல் நடந்தபோதுகூட நல்லதம்பிய கூப்பிடல. காளிமுத்து அண்ணன் இருக்கும்போதே, அவருடைய கையெழுத்தை நல்லதம்பி தவறாப் பயன்படுத்தினார்ன்னு அண்ணனே சொன்னாரு. 2006-ல், அண்ணன் காளிமுத்து சபாநாயகரா இருந்தப்ப, அவருடைய கையெழுத்தை, அவருடைய லெட்டர்பேடை நல்லதம்பி தவறா பயன்படுத்தினாரு. நல்லதம்பி படிச்ச படிப்பு, அறிவு எல்லாத்தையும் மோசடிக்கு மட்டுமே பயன்படுத்திட்டு இருக்காரு. தமிழ்நாடு பூராவும் நல்லதம்பி மேல ஆயிரக்கணக்குல கேஸ் இருக்கு.” என்று நொந்தபடி அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
நல்லதம்பியின் கடந்த கால மோசடிகளில் சில...
2010-ல் இதே நல்லதம்பி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி பெற நான் கொடுத்த ரூ.69 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்கள் என உமா மகேஸ்வரி, வேளச்சேரி ரவி ஆகியோர் மீது புகார் அளித்தார். இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என உமா மகேஸ்வரி, அப்போது காவல்துறையிடம் விளக்கம் அளித்தார்.
2016-ல் திண்டுக்கல் மா.மூ.கோவிலூரைச் சேர்ந்த பி.இ. பட்டதாரியான விக்னேஷ் என்பவருக்கு உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ரூ.15 லட்சம் வாங்கியிருக்கிறார், நல்லதம்பி. வேலை வாங்கித் தராத நிலையில் பணத்தைத் திருப்பிக்கேட்டபோது, ‘கவர்னர் கையெழுத்து வேண்டும். அதற்காக, கவர்னர் மகன் ரூ.2 லட்சம் கேட்கிறார் எனச் சொல்லி, கூடுதலாக ரூ.2 லட்சம் வாங்கி, மொத்தத் தொகை ரூ.17 லட்சத்தையும் ஏமாற்ற, விக்னேஷின் தந்தை பி.ரவிச்சந்திரன் திண்டுக்கல் எஸ்.பி.யிடம் புகாரளித்தார்.
கடந்த 15-11-2021ல் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது அளித்த புகாரில், அரசு வேலை பெற்றுத்தருவதாக பல்வேறு நபர்களிடமிருந்து ரூ.1.60 கோடி வசூலித்துக் கொடுத்தேன் என நல்லதம்பி குறிப்பிட்டுள்ளார். ‘அரசு வேலைக்கு உங்களிடம் பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகி நெருக்கடி தரும்போது, யாராவது ஒரு வி.ஐ.பி.யின் பெயரைச் சொல்லி, அவரிடம் கொடுத்துவிட்டேன் எனப் பழிசுமத்தி, காவல்துறையிடம் புகாரளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாக, உங்கள் மீதே குற்றச்சாட்டு திரும்புகிறதே?’ எனக் கேட்க, நல்லதம்பியின் கைபேசி (88XXXXXX99) எண்ணில் தொடர்புகொண்டபோது, நம்மைத் தவிர்த்தார். குறுந்தகவல் அனுப்பியதும் ‘நானே அழைக்கிறேன்..’ என்று பதிலளித்தவர், அடுத்து நம்மைத் தொடர்புகொள்ளவே இல்லை. தனது கருத்தையும் விளக்கத்தையும் பகிர நல்லதம்பி முன்வந்தால், வெளியிடத் தயாராகவுள்ளோம்.
ராஜேந்திரபாலாஜி வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை, ‘விஜயநல்லதம்பியை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?’ என விருதுநகர் மாவட்ட காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியது. ஆனாலும், நல்லதம்பியை இன்றுவரையிலும் சுதந்திரமாக உலவவிட்டிருக்கிறது காவல்துறை. அதனால், ‘இந்தப் புகாரும் எந்த அளவுக்கு நேர்மையாக விசாரிக்கப்படும்?’ எனச் சந்தேகம் கிளப்புகிறார்கள், ரவிச்சந்திரன் தரப்பினர்.